இவ்வளவு ஆண்டுகள் ஏன் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்டீங்களே, இப்போது என் நிலையை பாருங்கள் என்று சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
பிரபல பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
ஒரு விஷயம் நடந்தால் உடனே சொல்ல வேண்டியது தானே, அது ஏன் இத்தனை ஆண்டு காலம் கழித்து சொல்ல வேண்டும் என்று பலரும் சின்மயி நோக்கி கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் சின்மயி மீது கடும் விமர்சனம் விழுந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சின்மயி அதிரடியாக டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு சந்தா கட்டணை செலுத்தவில்லை என்ற காரணத்தினால் நீக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி அவர் சந்தா தொகையாக ஐந்து லட்ச ரூபாயை கேட்பதாகவும், ஆளாளுக்கு ஒரு தொகையை உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கின்றனர் எனவும் சின்மயி கூறியிருந்தார். இதற்கு டப்பிங் யூனியனின் இணை செயலர் ராஜேந்திரன், இரண்டு ஆண்டுகாலம் யூனியனுக்கு உறுப்பினர் கட்டணத்தை சின்மயி செலுத்தாமல் இருந்ததோடு, யூனியனில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்படாமல் இருக்கிறது என்று யூனியன் நடவடிக்கைகள் குறித்து, கடுமையாக விமர்சித்திருந்தார். அப்படி சொல்லியது ஏன் என்று கேட்டு, விளக்கம் அளிக்க சின்மயிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அதன்பின் தான் பொதுக்குழுவைக் கூட்டி, அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று கூயிருந்தார்.
இந்நிலையில் சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
ஒரு பெண் வெளியுலகிற்கு வந்து பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பேசினால், இப்படித்தான் ஆகும் என தெரிந்துதான், அமைதியாக இருந்தேன். இத்தனை ஆண்டுகாலம் ஏன் தாமதித்தீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்கும் ஆண்கள், இதன் பிறகாவது, என்னுடைய தாமதத்துக்கான காரணத்தை புரிந்து கொள்வர். இப்பவே இந்த கதி என்று குறிப்பிட்டுள்ளார்.