ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரொக்கமாகவோ கார்டு மூலமோ பணத்தைச் செலுத்தாமல் குளியல் தொட்டியில் நாணயங்களை நிரப்பி ஐபோன் எக்ஸ்எஸ் மாடலை வாங்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்ய வலைப்பதிவாளர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், 350 கிலோ எடையுள்ள குளியல் தொட்டி, ஆப்பிள் விற்பனையகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவலாளிகளுடன் சண்டை போட்ட பிறகு, மிகுந்த சிரமத்துக்கு இடையில் குளியல் தொட்டியை ஒரு குழு தூக்கிச் சென்றது.
இதுகுறித்து ஆப்பிள் செய்தித்தொடர்பாளர் லுட்மிலா செமாஷினா கூறும்போது, ”சில்லறைகளை எங்களின் பணியாளர் மிகவும் பொறுமையாக எண்ணினார். நாணயங்களை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது.
குளியல் தொட்டியில் 1,00,000 ரூபிள்கள் (1,538 டாலர்கள்) இருந்தன. அத்தொகை புது ஐபோன் எக்ஸ்எஸ் வாங்குவதற்குப் போதுமானதாக இருந்தது. ரஷ்யாவில் ஐபோன் எக்ஸ்எஸ் 1,050 முதல் 1,500 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.
நாங்கள் வாடிக்கையாளரின் வசதியே முக்கியம் என்று நினைக்கிறோம். வாடிக்கையாளர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி, குளியல் தொட்டி முழுக்க நாணயங்களை நிரப்பிக்கொண்டு வருகிறார். அதைக் கொண்டு ஐபோனை வாங்குகிறார். அதை எங்களின் விற்பனையாளர் பொறுமையாக எதிர்கொள்கிறார்” என்றார்.