அசலைவிட அதிகமாக ரசிப்பீர்கள்’ என நம்புகிறேன் என ‘முத்து’ ஜப்பானில் ரீ ரிலீஸ் ஆவது குறித்த ப்ரமோஷன் வீடியோவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
‘முத்து’ திரைப்படம் 4கே தரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, இசையும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு ஜப்பானில் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், ரஜினியின் ப்ரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ‘தேமாவின் கொம்பத்து’ என்ற மலையாளப் படத்தின் தமிழ்த் தழுவலே ரஜினி நடிப்பில் வெளியான ‘முத்து’. 1995-ல் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தப் படம், 1998-ல் ஜப்பானில் வெளியாகி, யாரும் எதிர்பாராத வண்ணம் அங்கும் சூப்பர் ஹிட்டானது.
கலாச்சார அளவில் பெரும் புரட்சி என்றே ஜப்பானிய ஊடகங்கள் இந்த வெற்றியைப் பற்றிப் பேசின. 23 வாரங்கள் ஒரே அரங்கில் ஓடி, 208 மில்லியன் யென் (ஜப்பானிய கரன்சி) சம்பாதித்தது. மேலும், 100 திரையரங்குகளுக்கு விரிவாக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 400 மில்லியன் யென்களை ‘முத்து’ சம்பாதித்தது.
இந்நிலையில், ‘முத்து’ திரைப்படத்தின் ஜப்பானியப் பதிப்பான ‘முத்து டான்சிங் மஹாராஜா’ (Muthu Dancing Maharaja) மீண்டும் வெளியாக உள்ளது. டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்த முறை 4கே, 5.1சி.எச். தொழில்நுட்ப மேம்பாட்டுடன் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதுகுறித்து ப்ரமோஷனல் வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், “நிறைய மக்களின் அபிமானத் திரைப்படம் ‘முத்து’. ஜப்பானிய மக்களுக்கும் இந்தத் திரைப்படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தை நிறைய ஜப்பானியர்கள் பார்த்திருக்கின்றனர். இன்னும் நிறைய பேர் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
கவிதாலயா நிறுவனம் இப்படத்தை 4கே வெர்ஷனில் அப்கிரேட் செய்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ரஹ்மானும் பின்னணி இசையெல்லாம் மேம்படுத்தியிருக்கிறார். இந்த மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை, நீங்கள் அசலைவிட அதிகமாக ரசிப்பீர்கள் என 100% நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.