இலங்கை நாணயமும் அரசியலும் வீழ்ச்சியடைந்து செல்கின்றன..

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.

————-

பாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

————-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

அந்த செய்தி எங்கிருந்து? யார்? அனுப்பியது தொடர்பாக எந்த விடயமும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் சபாநாயகர் பிரதம நீதியரசருக்கு கடிதம் எழுதியதாக வைரலாக பரவியுள்ளதாக அறிய கிடைத்தது. என குறிப்பிடப்பட்டுள்ளது

————–

Related posts