பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு போதுமான அளவுக்கு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டுக்கான ரூ.11 ஆயிரத்து 836 கோடி(166கோடி டாலர்) உதவியை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.
பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி ரத்து செய்யப்பட்டாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்திலும், வெறுப்பிலும் உள்ளது தெளிவாகிறது.
பாகிஸ்தானில் மறைந்து வாழும் தீவிரவாதிகளையும், சுதந்திரமாகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்கா பல முறை எச்சரித்து வந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு இதில் அதிக தீவிரம் காட்டவில்லை. பாகிஸ்தானுக்கு புதிய பிரதமராக இம்ரான்கான் வந்த நிலையிலும் கூட அந்த நிலையில் முன்னேற்றமில்லை.
இந்தச் சூழலில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துங்கள், ஒழித்துக்கட்ட எங்களுக்கு உதவுங்கள் என்று கூறியிருந்தோம். ஆனால், எங்களுக்கு பாகிஸ்தான் எந்தவிதத்திலும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியாக ரூ.11 ஆயிரத்து 836 கோடியை (166கோடி டாலர்) அடுத்த ஆண்டுக்கு வழங்க முடியாது.
பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அபோட்டாபாத்தில்தான் ஒசாமா பின்லேடன் வாழ்ந்து வந்தார் என்று தெரியும். ஆனால், அவர்கள் அமெரிக்கப் படையினருக்கு ஒருபோதும் தகவல் அளிக்கவில்லை. ஆனால், எங்களிடம் இருந்து கோடிக்கணக்கான உதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டனர்.
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தாக பாகிஸ்தானுக்கு இனிமேல் உதவப் போவதில்லை”.
இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் கோல் ராப் மேனிங் கூறுகையில், ”பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு அமெரிக்கா வழங்க உள்ள 166 கோடி டாலர் உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக எந்த உதவிகளும் பாகிஸ்தானுக்கு செய்யப்படாது” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலாளர் டேவிட் செட்னே கூறுகையில், ”பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தப்படுவது ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இது பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடுமையான அதிருப்தியில் இருப்பதன் வெளிப்பாடு. அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து தொந்தரவு அளிப்பது, தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் பாகிஸ்தான் மீது அதிருப்தி அடைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.