பிரதமரை பதவிநீக்குவது, பாராமன்றத்தை இடைநிறுத்துவது தேர்தலை நடத்த முயல்வது மற்றும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பை நிராகரிப்பது போன்ற ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமெரிக்கா இலங்கை மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என அமெரிக்க செனெட் உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரு ஜனநாயக நாடுகளிற்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கு கடினமாக பாடுபட்ட நண்பரிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றேன் என ஜனநாயக கட்சியின் செனெட் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த உணர்வின் அடிப்படையில் இலங்கை பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிராகரித்தமை குறித்த எனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசமைப்;பின் அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சியை மதித்தும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அமெரிக்க செனெட் உறுப்பினர் சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீங்கள் நல்லிணக்கம் ஜனநாயக சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி வழங்கிய 2015 தேர்தலிற்கு பின்னர் அமெரிக்க இலங்கை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன என தெரிவித்துள்ள செனெட்டர் 2015 ற்கு பின்னர் அமெரிக்கா பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் மூலம் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள என கிறிஸ் வன் ஹொலன் தெரிவித்துள்ளார்.
பிரதமரை பதவிநீக்குவது, பாராமன்றத்தை இடைநிறுத்துவது தேர்தலை நடத்த முயல்வது மற்றும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பை நிராகரிப்பது போன்ற உங்கள் நடவடிக்கைகள் இரு நாடுகள் மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் எனவும் அமெரிக்க செனெட் உறுப்பினர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பு, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வை காணுமாறும் அமெரிக்க செனெட் உறுப்பினர் சிறிசேனவை கேட்டுக்கொண்டுள்ளார்.