ரஜினியின் ‘2.0’ திரைப்படம் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி புதிய சாதனை படைக்க உள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. மேலும் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை என்கின்றனர். இதற்கு முன்பு எந்த தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஏற்கனவே 1991-ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் வந்தது. 2007-ல் வெளியான சிவாஜி படம் 1000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக பேசப்பட்டது.
‘2.0’ இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.
முதன் முறையாக 4டி ஒலி தொழில் நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்திய படங்கள் அனைத்தையும் பாகுபலி வசூலில் பின்னுக்கு தள்ளி உலக அளவில் பேசப்பட்டது. அதுபோல் 2.0 படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான இடத்தை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.