கடல் அலை தாலாட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் ஆதிகால அழகு செல்வாவின் மனதை காந்தச்சுழிபோல சுழற்றி ஆகர்சிக்கிறது. ” ஆகா.. தமிழே அழகே.. ஆனந்தமே.. பொற்குடத்துக் குங்குமப் பொட்டே.. உன்னைக் காண்பதற்காக எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் மரணக்குளத்தில் மூழ்கி மூழ்கி எழலாமே..” என்று அருகில் நின்ற சுரேசிடம் கேட்கிறான்.
அதை ஆமோதிக்க அங்கு ஒரு நொடி இடைவெளி இருக்கவில்லை. காரணம் சடாரென காட்சியில் ஒரு யூ ரேண்..!
கண்களால் குடிக்க முடியாத கடல் வெள்ளம்.. அந்த வெள்ளக்காட்டிலே கோடியாக்கரையின் பேரலைகள் ஓங்கி அடிக்கின்றன. காற்றில்லாத பெரு வெளியில் பாய்மர கப்பலொன்று வெள்ளி அலைகளை அள்ளி வீசியபடி துள்ளி வருகிறது. அதிலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் இறங்குகிறார். அருகில் சில கடலோடிகள்.
பழுத்த கொக்கின் சிறகுகள் போன்ற நரை.. கையில் தடி.. அவ்வைப் பிராட்டி போல பழுத்த கிழவி.. ஆனால் ஆயிரம் கண்களால் இழுக்கும் காந்த சக்தி, அருகே வருகிறாள். புகையிலை காம்பின் கீறு போல ஒரு சிறு பொழுது அவனையே கூர்ந்து பார்க்கிறாள். கண்டு கொண்டான்.. அவள் கண்களுக்குள் காலப்பெரு மழை பொழிந்து கொண்டிருக்கிறது..
” செல்வா என்னை தெரிகிறதா..?”
கூர்ந்து பார்க்கிறான்.. ” அம்மா உன்னைத் தெரியாத ஒருவன் இருக்க முடியுமா..? வல்வையில் பிரபாகரனின் வீட்டிற்கு அருகாமையில் கோயில் கொண்ட முத்துமாரி தாயே.. வணக்கம்..!”
” செல்வா சமய புரத்தில் இருந்து புறப்பட்டு, படகில் ஏறி வல்வை சென்று நான் கோயில் கொண்டது..?”
” கோபுரத்தில் சிற்பங்களாக அந்தக் கதையைப் பார்த்தேன் அம்மா..! நாமெல்லாம் அறியாத ஒரு மகோன்னத காரியத்தை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கின்றி நீ படகில் ஏறியிருக்கமாட்டாய் அம்மா..!”
” மகனே இலங்கைத் தீவு கடலால் பிளவுபட்டாலும் அந்தத் தேசம் என்னாட்சிக்குட்பட்டது. அதுதான் நானும் படகேறி சென்று வல்வையில் இருந்து காவல் செய்கிறேன். ” அவள் கண்களுக்குள் காலம் இல்லாத ஒரு காட்சி தெரிகிறது.. ஆதியையும் அந்தத்தையும் அப்படியே பார்க்கும் படி காட்சியை நிறுத்திக் காட்டுகிறாள்.
பார்க்கிறான் செல்வா.. அவன் தேகம் நடுங்குகிறது.. ” அம்மா இப்படியெல்லாம் இந்த வரலாறு நகரப்போகிறதா..?” நடுங்கியபடி கேட்கிறான்.
” இன்று சொன்னால் நம்ப முடியாது.. இதோ உன் கண்முன்னால் ஓடும் ஒளியின் காலம் ஒரு நாள் அந்த இடத்திற்கு வந்து சேரும். அப்பொழுது இந்த நிதர்சனத்தை உலகம் பார்க்கும். அதுவரை இந்த வாழ்வு துயர்போல காட்சியாகும்.”
” இது போதும் தாயே.. எத்தனையோ வீராதி வீரரெல்லாம் இருக்க என்னை மட்டும் பிரபாகரனின் மண்ணுக்கு அழைத்ததும், இன்று அந்த மண்ணைவிட்டு என்னை மேலே அழைத்ததும் ஏன் தாயே..?”
” செல்வா எல்லாமே ஒரு காரணத்தினால்தான் நடக்கிறது.. உன் உள்ளத்தில் ஓர் எண்ணம் மலரும்போது எங்கோ ஓரிடத்தில் அதை தாங்கிச் செல்லும் வாகனமும் புறப்பட்டுவிட்டது என்பதை புரிந்து கொள்.”
வேறொரு குரல் கேட்டது.
” ஐயா நீங்கள்..?”
” முத்துமாரியை கோடியா கரையில் இருந்து வல்வை அழைத்துச் சென்ற படகோட்டி, எனது ஊர் வல்வெட்டித்துறை. செல்வா இந்த உலகத்தில் எத்தனையோ கோடி வாகனங்கள் ஓட, இரண்டு வாகனங்கள் மட்டும் மோதி மரணத்தை விளைவிப்பது ஏன்..?”
” வானத்தில் கேட்கும் இடி முழக்கமும், கொட்டும் மழையும், அடிக்கும் புயலும் தற்செயலானதல்ல..! அதுபோலத்தான் விபத்தும் தற்செயலானதல்ல.. அது ஒரு நிகழ்வு மட்டுமே. கவலை இருந்தால் மறந்துவிடு. உனக்குள் வந்த சிந்தனைகள் விரைவானவை.. அவை இருக்கும் மட்டும்தான் உன் வாழ்வும். ஆனால் நீ ஒரு தீர்க்கதரிசி உன் தீர்க்கதரிசனங்களே இனி வரும் காலம். அதைப்பிறப்பிக்கத்தான் இரண்டு வாகனங்கள் ஒன்றாக சந்தித்துள்ளன.”
” புரிகிறதையா.. ஆனால் நான் தீர்க்கதரிசி என்பதற்கு நீங்கள் கண்ட உதாரணம் என்னவென்று அறியலாமா..?”
அவர் சிரிக்கிறார்.. ” செல்வா ஈழப் போராட்டம் கருத்தியலுக்கும் சிறது முக்கிய இடம் கொடுத்திருந்தால் ஆரியத்தையும் திராவிடத்தையும் அது அடையாளம் கண்டிருக்கும் என்ற உன் முகநூல் பதிவே போதுமே..? ”
” உண்மைதான் ஐயா.. அதுவும் என்னுடைய கவலைகளில் ஒன்று. ஈழப் போராட்டம் திராவிடத்தை மட்டும் அடையாளம் கண்டிருந்தால் அன்றே தமிழகம் விடுதலை பெற்றிருக்கும். திராவிடத்தினுடைய வீழ்ச்சியே தமிழினத்தின் அறிவியல் வெற்றியென கருதியவன் நான். ஈழம் வந்த திராவிட தலைவர்களை எல்லாம் தாமாகவே கனிந்து வந்தார்களா..? இல்லை யாரோ அனுப்பிய வெம்பல்களா ? என்பதை அங்குள்ளவர்கள் விதை பிரித்துப் பார்க்க தவறிவிட்டார்கள்.!”
” எப்படி..?”
” அவர்கள் உண்மையாகவே ஈழம் வந்திருந்தால் இன்று அவர்கள் முதலாவதாக பேச வேண்டியது ஈழத்தின் விடிவையே.. ஏன் பேசவில்லை.?”
” இவ்வளவு பெரிய துயரங்களை பார்த்த பின்னரும் அவர்கள் ஏன் திராவிடத்தையே காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள்..? ”
” அவர்கள் உள்ளத்தில் திராவிடம் இருக்கிறதா..? இல்லை ஈழம் இருக்கிறதா..? திராவிடத்தை காக்க வேண்டும் என்றே பேசுகிறார்கள். ஈழத்தை எப்படி கைவிட்டார்கள் என்று பாருங்கள். அவர்கள் ஈழத்தை உறவாடிக் கெடுத்திருக்கிறார்கள். ஆகவேதான் நாம் அறிவோடு சிந்தித்திருக்க வேண்டும் என்கிறேன்.”
” ஆரியம், திராவிடம், மார்க்சியம், லெனினிசம், கம்யூனிசம், தலித்தியம் எல்லாம் வெறும் கருதுகோள்கள் மட்டுமே. அவைகள் நாடுகள் அல்ல.. அவற்றின் பெயரால் ஒரு நாடும் இந்த உலகில் இல்லை..” செல்வா சிறிது நிறுத்தினான்.
” அப்படியானால் இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் எதற்குமே தனிநாடு இல்லையே..? தமிழர்களுக்கு மட்டும் எப்படி அது சாத்தியமாகும்..? ” படகோட்டி கேட்டார்.
” அவர்கள் இந்தியா என்ற கருதுகோளுக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள். சோவியத் என்பது ஒரு கருதுகோள் அதில் இருந்த நாடுகள் சுதந்திரமாக இருந்தன. ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒரு கருதுகோள் அதற்குள் இருக்கும் 28 நாடுகளும் தனித்தனியே சுதந்திரம் உள்ளவை. ஐக்கியராச்சியம் என்பது தனிநாடு இல்லை ஸ்கொட்லாந்து, அயர்லாந்து என்று பல நாடுகளை கொண்ட ஒரு கருது கோள்தான்.”
” ஆனால் இந்தியா என்ற கருதுகோளுக்குள் உள்ள மாநிலங்களுக்கோ தனியாக பிரியும் அதிகாரம் கிடையாது. ஆரியம், திராவிடம், தலித்தியம் என்ற மூன்று பெரும் போர்வைகளினால் அது மூடப்பட்டு, மீளா இருளில் கிடக்கிறது ” என்று செல்வா கூறினான்.
” அந்தப் போர்வையை விலத்தினால்.?”
” முடியாது..! விலத்தினால் மேலை நாடுகள் முதல் எதிரிகளாக மாறும்..”
” உதாரணம்..?”
” அதோ பாருங்கள்.. பாகிஸ்தான் பிரிவை மூர்க்கமாக எதிர்க்காத மகாத்மா காந்திக்கு என்ன நடக்கிறது..? பங்களாதேசை பிரித்த இந்திராகாந்திக்கு என்ன நடக்கிறது..? ஈழத்திற்கு படை கொண்டு போன ராஜீவ் காந்திக்கு நடந்தது என்ன..? ”
” மூவர் மரணங்களுக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது.!! இந்தப் போர்வையை விலத்தினால் காந்திகளுக்கு எதிராகவே உலகம் திரும்பும் என்பதை நாம் அவதானித்திருக்க வேண்டும்…”
” அதே வேலையைத்தான் ஈழத்திலும் செய்தார்கள்..! உலகம் அவர்களையும் மண்ணோடு மூடிவிட்டு, எதுவும் தெரியாதது போல நாடகமாடிக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.”
” அப்படியானால் இந்த அவலத்தை கடப்பது எப்படி..?”
” இதை கடக்க வேண்டும் என்ற புரட்சிகர கருத்தை வைத்தவனே நான்தான். முன்னர் நீங்கள் சொன்னது போல இந்த சிந்தனை என் வாயிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிட்டது. அக்கணமே இதை ஏற்றிச் செல்லும் வாகனமும் புறப்பட்டுவிட்டது. அதைத்தான் முத்துமாரி அம்மனின் கண்களின் உள்ளே தெரியும் காலப் பெருமழையில் ஸ்படிகமாக பார்த்தேனே..”
” நல்லது செல்வா.. சரி..! இத்தனை கோடிகள் இருந்தும் தமிழனுக்கு ஒரு நாடில்லையே என்ற குரல்களும் கேட்கத்தானே செய்கிறது இதற்கு உனது பதில் என்ன..? ” இது படகோட்டி.
” பதில் மிக எளிதானது. தமிழனுக்கு இந்த உலகத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய நாடு இருந்தாலே போதும் அவன் இந்த உலகத்தையே தன் காலடிக்குக் கொண்டு வந்துவிடுவான் என்பதை எங்களைவிட உலக வல்லரசுகள் சிறப்பாகவே தெரிந்து வைத்திருக்கின்றன.”
” புரியவில்லை..?”
” நமக்கிருக்கும் நெடிய வரலாறு கொண்ட மரபணு கட்டமைவு சாதாரணமான ஒன்றல்ல.., அது இந்த உலகத்தை ஆட்சி செய்யும் மரபணு என்பது எம்மைவிட எமது எதிரிகளுக்குத்தான் அதிகம் தெரியும். ”
” சரி.. அப்படியானால் நடந்து முடிந்த ஈழப் போரும் அதன் அழிவும் தமிழருக்கு சொல்ல வரும் செய்தி என்ன..? ” படகோட்டி மேலும் ஓர் உப கேள்வியைப் போட்டார்.
” சந்தேகம் என்ன இந்த அழிவு நாம் ஒரு சிறிய நாட்டை ஆளப்பிறந்த இனமல்ல இந்த உலகத்தையே ஆளப் பிறந்த இனம் என்பதைத்தான் தெளிவாகக் காட்டியிருக்கிறது.”
” நல்ல விளக்கம் ஆனால் ஒரு நாட்டையே உருவாக்க முடியாமல் நாடோடிகளாக இருக்கும் நாம் உலகத்தை எப்படி ஆட்சி செய்வது..? இதை சாதாரண மனிதர்களால் ஏற்கத்தான் முடியுமா..?”
செல்வா சிரித்தான்.. தொடர்ந்தான்.. ” கையில் வெறும் குச்சிகளுடன் ஆடு மேய்க்கும் இடையர்களாக வந்த ஆரியர்கள் இந்த உப கண்டத்தை ஆள முடியும் என்றால்.. ஆதிப் பெரும் குடிகளாக நாகரிகம் கண்ட தமிழர்களால் ஏன் உலகத்தை ஆள முடியாது..?”
” ஐயா.. நாட்டை வைத்து உலகத்தை ஆள்வது மிகமிக பழைய சிந்தனை, இன்று அது நீர்த்துப் போய்விட்டது. இனி அறிவே உலகத்தை ஆளப்போகிறது. உலகத்தை ஆளும் இணையப் பிரவாக அரங்கில் நாடு என்பது தாழ்ந்து போன படகு. உலகத்திற்கு சொந்தக்காரனான தமிழனின் அறிவே இனி அகிலத்தை ஆளும் அரசு.”
” நல்லது.. ம்.. ” மேலே தொடரச் சொன்னார்.
” ஐயா.. தமிழ் மூளையே இன்றைய உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதோ பாருங்கள்..” உலகப்பந்தில் ஓடிக் கொண்டிருக்கும் பல தமிழர்களை சுட்டிக் காட்டுகிறான் செல்வா.
வெல்ல முடியாத மாபெரும் புதுமை சிந்தனைகள் எல்லாம் தமிழ் மூளைகளில் இருந்தே ஊற்றெடுக்கும் அதிசயத்தை காட்டுகிறான்.. ” சார்ர் ” என்ற ஒரு லேசர் ஒலி கிலீரென ஓடுகிறது.. மனங்கள் எல்லாம் அசைய முடியாமல் அந்த ஒலியில் விறைப்போடுகின்றன.
” செல்வா இந்த உலகத்தையே இப்போது தமிழ் மூளைகள்தானே ஆட்சி செய்கிறது..?” படகோட்டி பதட்டத்துடன் கூறுகிறார்.
” உண்மைதான் ஐயா..!”
” அப்படியானால் இது ஏன் தமிழனுக்கு தெரியவில்லை..?”
” ஐயா துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தை துன்பமாகவும் மாற்றுவது மனம். நமது மனத்தின் இரிசை சரியான பக்கம் திருப்பினால் இந்த இரகசியத்தை நமது மக்கள் புரிந்து கொள்வார்கள். அந்த உண்மையை காட்டுவதற்கான பிரளய வெடிப்புத்தானே ஈழப் போர்.. அது ஒரு மகாவெடிப்பல்லவா..?”
” எப்படி ஒரு சிறிய புள்ளியில் ஏற்பட்ட வெடிப்பை மகா வெடிப்பு என்று கூறுகிறார்களோ.. அந்த வெடிப்பே இந்த பிரபஞ்சத்தை நாளும் நாளும் புதிது புதிதாய் உருவாக்கிச் செல்கிறதே, அது போன்ற ஒரு வெடிப்புத்தான் வன்னியில் ஏற்பட்ட வெடிப்பு..! இன்று அதுதான் உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.. அருவமாக நகரும் அந்த விசை நாளாவட்டத்தில் அந்தப் புதிய தமிழ் பிரபஞ்சத்தின் அழகை உங்கள் கண் முன் தரிசனமாகும்.”
” ஆனால் எப்போதுமே தோல்வியில் வாழ்ந்து பழகிய இன்றைய சராசரி தமிழர்கள் இந்த வெற்றியை பார்க்க பயப்படுகிறார்கள். தோல்விக்குள் இருப்பதே தமக்கு பாதுகாப்பு என்று கருதுகிறது அவர்கள் உளவியல். ”
” இந்த உண்மை தெரிந்தால் எதிரி இந்த உலகத்தையே அழித்துவிடமாட்டானா..?”
” முடியாது இந்த உலகம் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அழியப் போகும் ஓர் உலகில் இத்தனை பெரிய மேதைகள் உருவாகியிருக்க முடியாது. இத்தனை அழகிய தோற்றங்கள் படைக்கப்பட்டிருக்க முடியாது. இந்த ஒரு செய்தி போதும் உலகத்தை தமிழ் வெல்லும் என்பதற்கு. ”
அப்போது இலட்சம் பேர் உட்கார்ந்திருக்கும் உதைபந்தாட்ட மைதானத்தில் கேட்கும் கைதட்டல் ஒலிகளுக்கு ஈடான பலத்த கரகோஷங்கள்.. செவிப்பறையில் அடித்து மோதுகின்றன. செல்வா திரும்பிப் பார்க்கிறான்… பாண்டிய நாட்டை ஆண்ட செண்பகப் பாண்டியன் முதல் நெடுஞ்செழிய பாண்டியன் வரை தூரத்தே ஏராளம் பாண்டிய மன்னர்கள், பிரதானிகள், பாண்டியர் கட்டிய படைகளின் கண்ணுக்கெட்டா தொலைவு தெரிகிறது.
” செல்வா.. இப்போது சொல்கிறேன், உன் மரணமும் ஒரு பிரளய வெடிப்புத்தான்..!! ஒரு பிரளய வெடிப்பின் காலம் மிக மிக குறுகியது.! ஆனால் அதன் பரவலாக்கமோ கணக்கிடமுடியாத பல மில்லியன் மில்லியன் கோடி கோடிகளாக பெருக்கெடுத்து, அந்தமில்லா முடிவிலியாகப் போகிறது…! அதுபோலத்தான் உன் சிந்தனைகளும் முடிவிலியாக விரிந்து செல்லப்போகிறது. நீ கொடுத்து வைத்தவன். உன் வாழ்வை விட,உன் மரணம் பல கோடி பெறுமதி மிக்கது..!” செண்பகப் பாண்டியன் தன் வாயாலும் அதை வழி மொழிந்தான்.
” பாண்டிய மன்னரே ஒரு பிரளய வெடிப்பு மரணமா..? இல்லை ஜனனமா..? ” செல்வா கேட்டான்.
” வெடித்ததும் மறைந்த அந்த ஒளிதான் இந்தப் பிரபஞ்சம். மரணமும் ஜனனமும் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவமே பிரளய வெடிப்பு. அதுபோலத்தான் உன் வாழ்வும் வெடித்தது ஒரு கணம்தான்.. அந்தக் கணத்தில் உன் மரணமும், ஜனனமும் ஆண் பாதி பெண் பாதியாக கலந்து கிடந்தது.”
” அதோ பார்.. ”
அப்போது, தமிழராய்ச்சி மாநாடு நடந்த யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் செல்வாவின் உருவப்படத்தை மூடியிருந்த திரை விலகுகிறது. வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவன் புகைப்படத்திற்கு மாலை சூட்டும் காட்சி தெரிகிறது.
” செல்வா இப்போது சொல் நீ பிறந்தாயா இல்லை இறந்தாயா..? போர் நடந்த அந்த மண்ணில் ஒரு முதல்வர் வருவார், அவர் உன் படத்திற்கு மாலை அணிவார் என்பதை கனவிலாவது நீ எண்ணினாயா..? தமிழகத்தில் இதுவரை எந்தத் தலைவருக்கும் கிடைக்காத பெருமை உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது..? இப்போது புரிகிறதா.. நீதான் பாண்டிய நிலா.. என்ற உண்மை. உனக்கு மட்டுமே அந்த பாண்டிய நிலாவின் ஒளி விழுந்திருக்கிறது.”
” இன்னும் வேண்டுமா..? அதோ பார் உனது பிறந்த நாள் உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.. நீ இறந்துவிட்டதும் கூடவே பிறந்துவிட்டதும் இப்போது தெரிகிறதா..?”
” தெரிகிறது..!” சுரேஸ் பாண்டியன் கண்கள் பனிக்கின்றன. திரும்பிப் பார்க்கிறான் அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.
பிரமாண்டத்திலும் பிரமாண்டமான அந்த அலங்கார மண்டபத்தில் பாண்டிய மன்னர்கள் மட்டுமல்ல தமிழ் மன்னர்கள் எல்லோருமே இப்போது தெரிகிறார்கள். யாரைக்கட்டித் தழுவுவது என்பது அவனுக்கே தெரியவில்லை.
வாத்தியங்கள் இசை முழங்க..
வரிசைதோறும் நடனங்கள் நடக்க..
மன்னர்கள் பூமாரிய பொழிய, மதுரை மீனாட்சி மீன்கொடியை பறக்கவிட.. வல்வை முத்துமாரி அம்மன் முடியை எடுத்துக் கொடுக்க.. சுந்தரபாண்டியன் வீரவாளை எடுத்து இடுப்பில் மாட்ட.. புலவர்கள் வாழ்த்துப் பா முழங்க..
செண்பக பாண்டியன் முடியை வாங்கி செல்வாவின் தலையில் சூட, மணிவாசகர் திருவாசகம் திசை எங்கும் முழங்க.. செல்வா பாண்டிய மன்னனாக முடி சூடுகிறான். அந்தப் பெருமை ஆயிரம் கோடி மின்னல் வேகத்தில் பறக்கிறது.
இது உண்மையா..? மனச்சாட்சி கேட்கிறது..!
” எதுவும் தற்செயலானதல்ல.. ஓர் எழுத்துக்கூட இந்தப் புவியில் தேவையில்லாமல் பதிவாவதில்லை, புரிந்து கொள்..!” என்று காற்று பதில் சொல்கிறது.
” இது பொய் என்றால் உன் மரணத்தின் மறு விநாடி இது மெய்யாகும்..! இல்லை மெய் என்றால் மரணமும் வாழ்வும் கரைந்து நீ பெரு வாழ்வு பெறுவாய்..!” என்றது.
” வாழ்க செல்வா பாண்டியர்…! ” வாழ்த்தொலி பிரபஞ்சமெங்கும் கதிர் வீச்சாய் பரவுகிறது..! ஒளி அரசன் அதை எடுத்துக் கொண்டு பிரபஞ்ச எல்லை நோக்கி ஓட்டமெடுக்கிறான்.
அந்தக் காட்சி அப்படியே உறைகிறது. ஒரு புகைப்படம் போல காலத்தை நிறுத்திய காட்சியாக பின் வாங்குகிறது..
அது பின்வாங்க பின்வாங்க.., பறந்து வந்த தூசிகள்.. தூரிகையாகி முப்பரிமாணத்தில் படம் வரைய ஆரம்பிக்கின்றன.
அந்தத் தூரிகையிலிருந்து பிறப்பதென்ன..? அந்தக் கற்பனையை எழுத முடியவில்லை..! தவித்து மூச்சுத்திணறி தடுமாறுகிறது தமிழ்.!
வானாகி..
மண்ணாகி..
காற்றாகி..
கடலாகி..
நதியாகி..
மலையாகி அருவியாகி…
இயற்கை என்னும் பேரரசனாகி..
ஆதியாய் அந்தமாய், ஜோதியாய் ஆனந்தக் காட்சியாய் கண் முன் தரிசனமாகிறது.. மனம் அனந்த கோடி நமஸ்காரம் செய்கிறது.
எங்கும் நிறை காற்றே..
பொங்கி எழும் கடலே.. கொட்டும் மழையே..
அளவிட முடியாத ஆகாயமே.. வானமாமலையே..
நீண்டு செல்லும் நிலமே.. நெடு மலைகளே..
ஓங்கி எழும் நெருப்பே..
கேளாய் ஒரு செய்தி..
” இக்கணம் செல்வா இயற்கையின் வடிவமானான்.. இன்று முதல் அவன் கதை தமிழர் வாழும் பகுதியெங்கும் காவியமாய் படிக்கப்படடட்டும்..” என்று முழங்குகிறது இயற்கை…
இனி..
கிராமங்கள் தோறும் இனி அவன் காவல் தெய்வமாய் சிலை வடிக்கப்படுவான்..!
அவன் கதை நாடமாகி நடிக்கப்படும்..!
அழியாப்புகழ் நாயகனாக உலகம் அவனை போற்றும்..! உலகுள்ளவரை அவன் வாழ்வான்..!
” ஆகாயத்தையே களமாக்கி எழுதப்பட்ட உலகின் முதல் கதைக்கு காவிய நாயகனான செல்வாவின் பெருமையை விஞ்ச இனியொரு காவியத்தலைவன் வருவானோ இந்த புவிக்கு..?” என்று இயற்கை மாதா யாழெடுத்து மீட்டினாள்.
இது கேலியல்ல.. செல்வா பாண்டியரே சொல்லச் சொல்ல எழுதிய வரிகள் என்பதற்கு சாட்சி யார்..?
வேறு யார் அதோ அந்த நிலாதான்..!
கரு நீலவானில் பாண்டிய நிலா பளிச்சென ஒளியெறிகிறது.. சாட்சி சொல்ல முகில் கூட்டங்கள் ஓடி வருகின்றன..!
கலையும் மேகம் வரையும் கோலங்களில் காலத்தின் கவிதையை அது எழுதிக் காட்டுகிறது..!
ஆனந்தத்தில் கண்கள் குளமாகின்றன…. படிப்போர் இமை முடிகளில் அனந்தக் கண்ணீர் புல்லின் நுனியில் தொங்கும் பனி நீர் குடமாய் தொங்கி நிற்க அதற்குள் ஆயிரம் பாண்டிய நிலாக்கள்..!!
அடடா..! அத்தனைக்குள்ளும் அவன் அல்லவா தெரிகிறான்..!
” பேனையை மூடிவிட்டு பாண்டியரே எப்படி படைப்பு என்கிறேன்..? ” அவன் புகைப்படத்தைப் பார்த்து..
” அருமை தோழர்..! ” என்று அவன்தான் சொல்கிறான்..!
” உண்மையைச் சொல் இதை எழுதியவன் நீ தானே..?”
ஏதோ ஒரு சிறு பொருள் மேலிருந்து விழுகிறது.. நிமிர்ந்து பார்க்கிறேன் தலைக்கு மேல் பாண்டியரின் புகைப்படத்தின் மாலைகள் ஆடுகின்றன..!
பாண்டியரின் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது..!
இது சத்தியம்..!
கி.செ.துரை
நிறைவு.. 23.11.2018