முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று கூட வேண்டும்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று கூட வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கேட்டுக் கொண்டுள்ளார்

இதுகுறித்து அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்ற அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசும்போது, ”அமெரிக்கா நமது மதத்திற்கும், இந்த மததிலுள்ள எதிர்கால தலைமுறையினருக்கும் எதிராக உள்ளது. நாம் இவர்களுக்கு எதிராக நிச்சயமாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கு எதிராக உலக இஸ்லாமியர்கள் ஒன்றுக் கூட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு மற்றும் வல்லரசுகளுக்கு எதிராகவும் சவூதி மக்களுடைய நலன்களை பாதுகாக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

அதை செய்ய நாங்கள் 450 பில்லியன் டாலர்களை எல்லாம் கேட்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts