டென்மார்க்கில் உள்ள அரச குடும்பத்தினர் கார்களை பரிசாக பெறக்கூடாதென அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
டென்மார்க் இளவரசர் பிறட்றிக் மெரி தம்பதியர் திருமணம் முடித்த போத ஐந்து புத்தம் புதிய கார்கள் அவர்களுக்கு பரிசாகக் கிடைத்தது.
வரி விலக்கு அளிக்கப்பட்ட அரச குடும்பத்தினர்க்கு கார்களை வழங்கும் போது நிறுவனங்களுக்கும், அதை அன்பளிப்பாக வழங்குவோருக்கும் ஏதாவது சிறப்பு இலாபம் இருக்கிறதா என்பதை இது குறித்து செய்திகளில் அறிய முடியவில்லை.
ஆனால் இப்போது கார்கள் போன்ற விலை கூடிய பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டால் அவற்றை அரச குடும்பத்தினர் நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக எக்ஸ்ரா பிலதற் கூறுகிறது.
பல நிறுவனங்கள் அரச குடும்பத்திற்கு கார்களை அன்பளிப்பாக வழங்கும்போது அவர்களுக்கு அது விளம்பரமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
மேலும் அரச குடும்பத்தினர் தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாக்களில் பங்கேற்று கார்களை பரிசாக பெறுவது பொருத்தமானதல்ல என்பதை சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல அரண்மனை சுயமாகவே முடிவெடுத்து சிறப்பாக நடக்க ஆரம்பித்துள்ளது.
ஏழைகளின் நிகழ்ச்சிகளில் அரச குடும்பம் பங்கேற்காது பணக்காரர்களின் நிகழ்வுகளில் பங்கேற்று விலை கூடிய பரிசில்களை பெறுகிறார்கள் என்று மற்றவர்கள் விமர்சனம் செய்தல் கூடாதல்லவா..?
மேலும் எல்லோரும் கார்களை பரிசாகக் கொடுத்தால் அரச குடும்பம் அவற்றை எங்கே நிறுத்துவது எப்படி பாவிப்பது என்பதெல்லாம் அடுத்தடுத்து வரும் கேள்விகளாகும்.
இருப்பினும் இப்போதாவது இந்த விவகாரத்தில் இருந்த தவறு திருத்தப்படுவதை வரவேற்காதோர் யாருண்டு இப்புவியில்.
மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று அவ்வை சென்னது காதில் கேட்கிறது.
அலைகள் 26.11.2018 திங்கள்