தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்த நாள் இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது.
கடந்த இரவு 12.00 மணிக்கு புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கேக் வெட்டி அவருடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் முகநூல்களில் நிறைந்து கிடக்கின்றன.
இன்றைய முகநூல் பதிவுகளில் எங்கு பார்த்தாலும் அவருடைய பிறந்தநாள் பதிவுகளே அதிக இடம் பிடித்துள்ளதை காண முடிகிறது.
தாயகம் உட்பட தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இப்பிறந்த நாளானது உணர்வுடன் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.
பிரபாகரனின் பிறந்த நாளை தொடர்ந்து 27ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் அதற்கான ஏற்பாடுகளும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபாகரன் அவர்கள் தெற்காசியாவில் போராட்டக்களத்தை சர்வதேச தரத்தில் முன் நகர்த்தியவராக போற்றப்படுகிறார். இவரை உலகத்தின் சிறந்த படைத்தலைவராக பீ.பீ.சி தேர்வு செய்தது முக்கிய விடயமாகும்.
தன்னோடு போர் நடத்திய ஜே.ஆர்.ஜெயவர்தனா ஓர் உண்மையாக பௌத்தனாக இருந்திருந்தால் தான் ஆயுதம் எடுக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்று அவர் கூறிய வாசகம் இன்றுவரை புகழ் மிக்க வாசகமாகவே இருக்கிறது.
தமிழர்கள் என்றால் புலிகள் என்ற பெயர் உலக மன்றில் பரவிச் செல்ல இவருடைய வீரம் செறிந்த போராட்டம் காரணமாகியிருக்கிறது. உலக அகராதிகளில் தமிழர்கள் என்றால் கூலிகள் என்று பதியப்பட்ட வாசகத்தை உடைத்து தகர்த்து, தமிழினத்திற்கு ஒரு புது முகம் கொடுத்த வீரன் என்று உலகத் தமிழர்கள் இவரை போற்றுவதில் பிளவுபட்டு நிற்கவில்லை.
உலகம் எல்லாம் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழர்கள் தமது ஆத்ம விடுதலையின் வடிவமாக இவரையே போற்றுகிறார்கள். தெலுங்குதேசம், கன்னடம் போன்ற இடங்களில் பாதிக்கப்படும் தமிழர்கள் இவரையே தமது துயரத்தின் விடிவு என்று கூறுவதை பல ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.
மேலும் தப்பி ஓடாது மக்களோடு மக்களாக நின்று போர் புரிந்தவர் என்றும் இவர் பாராட்டப்படுகிறார்.
தனது குடும்பமே தனது மக்கள் என்று கருதியவர்.. தனது இனத்தின் குழந்தைகள் மரணித்தது போலவே தனது குடும்ப இழப்புக்களையும் சந்தித்தார். தனது குடும்பத்தை காக்க இவர் எந்த சிறப்பு ஏற்பாடும் செய்யவில்லை என்பதே இவருடைய பெருமைக்கு அடையாளம். இவருடைய தாய் தந்தையரின் கைது இதற்கு ஓர் உதாரணம். இவருடைய இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்தைவிட இவருடைய தியாக மனத்திற்கு வேறு சான்றுகள் தேவையில்லை என்கிறார்கள் பலர்.
அதேவேளை இவர் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் இரண்டு வாதங்கள் நிலவுகின்றன. ஆனால் கடைசிப் போர் நடைபெற்ற 2009 மே. 17ற்கு பின் இவர் மக்கள் மன்றில் தோன்றவில்லை.
இவருடைய போரின் சிறப்பம்சம் என்ன..?
ஐ.நா தலைமையில் வல்லரசுகளால் எழுதப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிடில் எந்தப் போராட்டத்தையும் உலகம் அங்கீகரிக்காது. அதற்கு பயங்கரவாத பட்டம் கட்டி, அதை பிளவுபடுத்தி, உள்ளும் வெளியேயும் பிளவுகளை உண்டாக்கி அழிக்கும் என்பது வரலாறு.
ஆனாலும் அப்படியொரு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அடி பணிந்தால் சுதந்திர தேசத்தை இன்னொரு அடிமை நாடாக்க நேரிடும்.. சுதந்திரத்திற்கு புது அடிமைத்தனம் என்பது பொருளாகாது என்பதால், எத்தனையோ வாய்ப்புக்கள் வந்தாலும் உலக சமுதாயத்திற்கு அடிபணிய மறுத்தார்.
சிங்கள இனவாதமும் வெள்ளை நிறவாதமும் ஒன்றுதான் எங்கிருந்தாலும் அடிமை அடிமைதான் என்று கூறி, 30 வருடங்களாக யாருக்கும் அடிமை இல்லாத ஒரு தேசத்தை நிர்வகித்து காட்டியது.. இவருடைய கின்னஸ் சாதனை.
அந்த வகையில் அவர் உலகத்தை எதிர்த்து நின்றார். அவர் தோல்வியடைந்ததாக கூறப்பட்டாலும், தன் தோல்வியால் ஆதிக்க சக்திகளை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்று தமிழ் மக்கள் அவரை போற்றி நிற்கிறார்கள். அதனால்தான் அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதாக புலம் பெயர் தமிழர் ஒருவர் கூறினார்.
உண்மையில் வெற்றி தோல்வி என்று ஒன்று கிடையாது. நமது மனங்களே அப்படியொரு பிரிப்பை உண்டு பண்ணியுள்ளன. ஆனால் இன்று உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புலம் பெயர் தமிழினம் ஒன்றை உருவாக்கிய விசை கொடுத்தவர் அவரே என்று சிந்தித்தால் அவர் உலகத்தை வெற்றி பெற்ற ஒருவராகிறார் என்று புலம் பெயர் தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிங்களத் தலைவர்கள் கூட பிரபாகரன் ஒரு வீரன் என்பதை பல தடவைகள் பாராளுமன்றில் பேசியுள்ளார்கள்.
இந்தப் போராட்டத்தை அழிய துணைபோனது தமிழர்களைவிட ஒட்டு மொத்த இலங்கைத் தீவுக்குமே பாரிய இழப்பு.. பிராந்திய சக்திகளுக்கு இலங்கை பலியாகக் கூடிய பின்னடைவு என்பதை சர்வதேச இராஜதந்திரிகள் அறிவார்கள்.
இத்தகைய பின்னணியில் வே. பிரபாகரன் பிறந்தநாள் நடைபெறுகிறது. ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதை சட்டத்தால் தடுக்க இயலாது, அது மனித உரிமை என்கிறார்கள் தமிழ் மக்கள்.
இயேசுநாதரை சிலுவையில் அறைந்த யூதர்கள் அவருடைய பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என்று தடுத்தாலும், 300 வருடங்கள் கழித்து அது பெரும் கொண்டாட்டமானது. இன்று உலகிலேயே மிகப்பெரிய விழாவாக இருப்பது இயேசுபாலன் பிறந்த கிறிஸ்மஸ் தினம்தான்.
ஆகவே பிறந்த நாள் பிறந்தநாள்தான்.. பிறப்பு இயற்கையானது.. அதை தீர்மானிக்கும் உரிமை மனிதனிடம் தரப்படவில்லை என்பதை உணர்ந்தால் பிறந்த நாளை எதிர்க்கும் சட்டப்புத்தகங்கள் தமது தர்ம நியாயத்தை இழந்து போய்விடுமன்றோ..?
கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் உலகம் அதுபோல பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடுவதையும் தடுக்க முடியாதன்றோ..? என்று ஒரு தமிழ் குழந்தை கேட்கும் கேள்விக்கு சர்வதேச வல்லரசுகளிடம் பதில் கிடையாது.
நாளை மாவீரர்தினம் ஆனால் மாவீரர் நாளை கொண்டாட தாம் அனுமதிக்கவில்லை என சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
அலைகள் 26.11.2018