டென்மார்க்கில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் கேர்னிங் நகரில் உள்ள அரசு பாடசாலைகளில் உள்ள வெளிநாட்டு பிள்ளைகளை தனியாக பிரித்தெடுத்து ஒன்று அல்லது இரண்டு பாடசாலையில் கொண்டு சென்று, ஒருங்கிணைத்து கற்பிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கின்றது கேர்னிங் நகரசபை.
இதில் முதல் கட்டமாக 80 வீதம் வெளிநாட்டவர் பிள்ளைகள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மிகுதி 20 வீதம் டேனிஸ் மாணவர்கள். அவர்கள் எத்தகைய பின்னணி கொண்ட மாணவர்கள்..? அவ்வாறு சேர்க்கப்படும் டேனிஸ் மாணவார்கள் யார்..? என்ற கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் ஊடகவியலாளர் வசதி கருதி கேட்கவில்லை.
கேர்னிங் நகரம் நீண்டகாலமாக வென்ஸ்ர கட்சியின் பிடியிலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர் அதிகமாக வாழும் குடியிருப்புப் பகுதிகளை அழித்து அந்த மக்களை மற்றைய பகுதிகளுடன் பரவலாக்கம் செய்வது தான் சரியானது என்ற கொள்கையை இப்போதைய ஆளும் வென்ஸ்ர கட்சியும், எதிர்க்கட்சியும் கூறி வருகின்றன.
இதன் அடிப்படையில் பல கேட்டோ பகுதிகள் அழிக்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் தங்களுடைய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் தொலைக்காட்சி கோப்பைகளை பூட்டியபடி கூட்டம் கூட்டமாக வாழ்வது, தவறானது என்றனர்.
கேட்டோ பகுதிகளில் மக்கள் டேனிஸ் மொழி, கலாச்சாரம் என்பன தெரியாது வாழ்ந்தால் தொழில்கள் பெருகாது, கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்கும் என்றும் வியாக்கியானம் பேசி வந்தது வென்ஸ்ர கட்சி அரசு.
இப்போது வெளிநாட்டவரின் பிள்ளைகளை ஓரிடத்தில் கூட்டி கற்பிப்பது கேட்டோ உருவாக்கமாகாதா..? என்று கேட்க ஆளில்லை.
இப்படி வெளி நாட்டு பிள்ளைகளை ஒன்று கூட்டினால் அதிக பணம் செலவழிக்காது சிறந்த சேவையை வழங்கலாம் என்று கூறுகிறார்கள் இந்த கொள்கையை வகுத்த நிபுணர்கள். வெளிநாட்டு பிள்ளைகள் அதிகம் இருந்தால் இணைவாக்கம் அடிபட்டு போய்விடும் என்ற கொள்கைக்கும் சொந்தக்காரர் இவர்களே.
மேலும் இன்றுள்ள நிலையில் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை முன்னேற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும் அதில் பரிபூரணமான வெற்றியை காண முடியவில்லை. ஆகவே இத்தகைய முயற்சி தவறானது அல்ல என்று ஆய்வுக்கு பொறுப்பாக இருக்கின்ற நிபுணர் கூறுகிறார்.
மேலும் இந்த முறை சிறந்த பலனை தரும் என்பதற்கு அவர் கூறுகின்ற காரணங்கள் பல.
அதில் ஒன்று இப்போது ஒவ்வொரு பாடசாலைகளிலும் வெளிநாட்டு பிள்ளைகளை தனியாக பிரித்து சிறப்பாக கல்வி கற்பதற்குக்கு மேலதிகமான பணம் செலவாகிறது. ஆகவே மாணவரை எல்லாம் ஒன்றாக சேர்த்து விட்டால் குறைந்த பணத்தில் சிறந்த சேவை வழங்கலாம் என்கிறார்.
மேலும் வெளிநாட்டு பிள்ளைகளுக்கும் சிறந்த நிபுணத்துவம் கொண்ட தரமான கல்வியை கொடுக்கவும் அது உதவலாம் என்றும் தெரிவிக்கிறார். இது வெற்றி பெற்றால் இதர நகரசபைகளுக்கும் கொண்டு செல்லலாம் என்றும் அவர் ஆசை வார்த்தை காட்டுகின்றார்.
இத்தகைய கேட்டோ பாடசாலைகளில் படித்த மாணவர்கள் பாடசாலை கல்வி முடிய அதே நட்பை தொடரும் போது அடுத்த தலைமுறை கேட்டோ உருவாகாதா..? அது இன்றைய நோபுரோ பிரச்சனையை விட பெரிய பிரச்சனையாக மாறாதா.. என்று தூரப்பார்வையுடன் யார் கேட்பது..?
இடிந்து கிடக்கும் கேட்டோ குடியிருப்புக்களின் கற்கள் சிரிக்காதோ..?
உலகமே ஒரு நாடாகி உலக சமுதாயத்தை எதிர் கொள்ளும் கல்வி வளரும் காலத்தில் இப்படி சிந்திக்கலாமோ தோழா..?
அலைகள் 26.11.2018