தென்னமெரிக்காவில் உள்ள ஆர்ஜண்டீனா நாட்டில் உலகின் பணக்கார பலமிக்க 20 நாடுகளின் மாநாடு இன்று வெள்ளி ஆரம்பித்தது. சென்ற ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடந்தபோது பலத்த ஆர்பாட்டங்கள் தீ வைப்புக்கள் எல்லாம் நடைபெற்ற நினைவுகள் மறக்க முன்னர் ஆர்ஜண்டீனாவில் கூடியுள்ளனர்.
உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தலைவர்கள் செயலில் மாற்றம் வேண்டும். உலக மக்களை ஏழ்மைக்குழிக்குள் தள்ளி வைத்திருக்கும் உங்கள் சுயநல பொருளாதார ஒழுங்கு மாறவேண்டுமென்ற போராட்டங்கள் தலைநகர் புவனஸ் அயரஸ்சில் வெடித்துள்ளன.
ஆர்ஜண்டீனா நாடு கடந்த பத்தாண்டு காலத்திற்கு முன்னரே பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுவிட்டது. ஆகவே மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தமது அதிருப்திகளை காட்ட வீதிக்கு வந்துள்ளனர். இவர்களை அடக்க போலீசார் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மறுபுறம் வந்துள்ள தலைவர்களோ மக்களோ ஆர்பாட்டங்களோ நமக்கு பெரிதல்ல என்று கூறாத குறையாக வந்துள்ளனர். அதைவிட பெரிய தமது தலையை பிய்க்கும் சிக்கல்களுடன் வந்துள்ளனர். ஜேர்மனிய சாஞ்சிலர் ஏஞ்சலா மேர்க்கல் வந்த விமானம் பழுதடைந்து மறுபடியும் ஜேர்மனியில் உள்ள கேள்ண் நகருக்கு திருப்பப்பட்டது. அவர் நாளையே பங்குபற்றுவார்.
அமெரிக்க அதிபருக்கும் ரஸ்ய அதிபருக்கும் பிரச்சனை உச்சக்கட்டத்தில் உள்ளது. உக்ரேனிய போர்க்கப்பல்களை ரஸ்யா கைப்பற்றியதால் உண்டான கோபம் அமெரிக்க அதிபர் ரஸ்ய அதிபரை சந்தித்து பேசமாட்டார்.
அதேவேளை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகப் போரில் அமெரிக்கக் கார்களுக்கு சீனா 40 வீதம் வரி விதிக்கிறது. அதை குறைக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா, மறுக்கிறது சீனா இதனால் பிரச்சனை.
பிரான்சிய அதிபர் எமானுவல் மக்ரொங்கோ சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் ஜமால் காஸ்கோக்கி கொலை வழக்கில் சர்வதேச நிபுணர்களின் விசாரணைகளை சந்திக்க வேண்டும் என்று கோரியுள்ளார். கொலைக்கு உத்தரவிட்டது சவுதி இளவரசரே என்பது அவரது சந்தேகம். மேலும் மத்திய கிழக்கு ஏமன் நாட்டுடன் சவுதி நடத்தும் சண்டையை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அவர்கள் எல்லாம் கிடக்கட்டும் என்றது போல, சவுதி இளவரசருடன் இந்திய பிரதமரும், ரஸ்ய அதிபரும் மகிழ்வாக பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மறுபுறம் பிரிட்டன் பிரதமர் 1982 ம் ஆண்டு ஆர்ஜண்டீனா – பிரிட்டன் இரண்டும் போக்லான்ட் தீவுக்காக சண்டை போட்ட பின்னர் முதற்தடவையாக ஆர்ஜண்டீனா பிரதமருக்கு கை கொடுக்கப்போகிறார்.
இத்தகைய முரண்பாடுகளின் கொதி நிலையில் மாநாடு ஆரம்பித்துள்ளது.
அலைகள் 30.11.2018 வெள்ளி