‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும், படத்தை நம்பி வந்து ஏமாந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.
அமிதாப் பச்சன், ஆமிர் கான், கேத்ரீனா கைஃப் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு, மிகுந்து பொருட்செலவில் உருவான படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’. படத்தின் ட்ரெய்லர் வந்த நாள் முதலே படத்தைப் பற்றி எதிர்மறையான அபிப்ராயங்களே உருவானது. படம் வெளியானதும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் படம் கடும் அதிருப்தியைச் சந்தித்தது.
படத்தின் விதி குறித்து சமீபத்தில் பேசிய நாயகன் ஆமிர் கான், “இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை நாங்கள் செய்தோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தை ரசித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர்களுக்குப் படம் பிடித்தது என்பதில் மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் குறைவானவர்களே. பெரும்பான்மையானவர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. அது எங்களுக்குத் தெரிகிறது. அதனால் நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதில் சந்தேகமே இல்லை.
என் படத்தைத் திரையரங்குக்கு வந்து பார்த்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் முடிந்த சிறந்த முயற்சியைச் செய்தும் அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை நான் தரவில்லை. நிறைய எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்து படத்தை ரசிக்க முடியாமல் போனார்கள் என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
ஆமிர் கான் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகும் மகாபாரதக் கதையின் வெப் சீரிஸுக்கு தயாராகிறார். இதற்காக அவர் இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல உள்ளார்