புனேயில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாததால் தனக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்தியதாக காவல்துறையிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புனே பிம்பிள் சவுதாகர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் இந்த புகாரை அளித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அப்போது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண் தான் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் ‘‘2015-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் ஹோமியோபதி மருத்துவராக உள்ளார். சில மாதங்கள் கழித்து கணவர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். எங்கள் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வருமாறு கணவரும் அவரது வீட்டினரும் என்னை துன்புறுத்தினர். ஆனால் நான் மறுத்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் பலமுறை என்னை திட்டியதுடன், அடித்து துன்புறுத்தினார். எனது நிலையை அறிந்து பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்பதால் அவர்களிடம் சொல்லவில்லை. ஒருமுறை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட வேண்டும் என கணவர் நிர்பந்தித்தார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
எனக்கு திருமணம் நடந்தது முதல் உடல்நிலை சரியில்லை என்றால் எனது கணவரிடம் சிகிச்சை பெறுவதை வழக்கமாக கொண்டு இருந்தேன். விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாத நிலையில் அடுத்த சில நாட்களில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனக்கு அதிகமானக காய்ச்சல் இருப்பதாக கூறி எனது கணவர் எனக்கு ஊசி போட்டார். அப்போது எனக்கு சந்தேகம் வரவில்லை. வழக்கமான சிகிச்சை என எண்ணினேன்.
பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது ரத்தத்தை பரிசோதனையில் செய்ததில் எனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். எனக்கு வேறு வழிகளில் எய்ட்ஸ் பாதிப்பு வர வாய்ப்பில்லை. என் மீதுள்ள கோபத்தால் எனது கணவர் எனக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.
விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாததால் ஆத்திரத்தில் என்னை விவகாரத்து செய்வதற்காக இந்த சதியை அவர் செய்துள்ளார்’’ என காவல்துறைக்கு அளித்த புகாரில் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் கணவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையிலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ‘‘அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு எவ்வளவு நாட்களாக உள்ளது என்ற விவரம் தெரிய வேண்டும். மேலும் அவர் கூறும் புகாருக்கு ஆதாரங்கள் வேண்டும். கணவரிடம் நடத்தும் விசாரணையில் தகவல்கள் தெரிய வரும்’’ எனக் கூறினர்.