தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார்.
பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார்.
கேள்வி: 2.0 படத்தைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது? இத்தனைக்கும் கத்தி பட வெளியீட்டின்போது பிரச்சனைகளைச் சந்தித்திருந்த நிலையில், துணிந்து இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்?
பதில்: தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்ல, பொதுவாக திரைப்படங்கள் மீது எனக்குப் பெரிய ஈர்ப்பும் ஆர்வமும் உண்டு. சிறுவயதிலிருந்தே, தினமும் ஒரு படமாவது பார்க்கும் பழக்கமுண்டு. அந்த ஆர்வம்தான் என்னை திரைப்படங்களை தயாரிக்கத் தூண்டியது.
கே. தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தபோதும் திரைப்படத் துறையில் ஈடுபாடு காட்டுவதற்கு இந்த ஆர்வம் மட்டும்தான் காரணமா?
ப. ஆமாம். அந்த ஆர்வம் மட்டும்தான் காரணம். டெலிகாம் என்னுடைய தொழில். திரைப்படங்கள் என் ஆர்வம். ஆனால், அதையும் தொழிலாகச் செய்யலாமென இப்போது தோன்றுகிறது. அதனால், தொடர்ந்து எல்லா மொழிகளிலும் திரைப்படங்களை எடுப்போம்.
கே. 2.0 படம் ஆசியாவில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்கிறார்கள்? இந்தப் படத்திற்கு ஏன் அவ்வளவு செலவு ஆனது?
ப. தொழில்நுட்பம். 4 டி ஒலிப்பதிவு, 3 டி தொழில்நுட்பம் ஆகியவை முக்கியக் காரணம். ஆசியாவில் முப்பரிமாணத்தில் உருவான படங்களில், இந்தப் படம்தான் அதிக பொருட் செலவில் உருவான திரைப்படம். அது தவிர, ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரெஹ்மான், ஏமி ஜாக்சன் என பெரிய கலைஞர்கள் இடம்பெற்றனர். ஆகவே இவ்வளவு செலவானது
கே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2015ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்டது. ஆனால், படம் வெளியாக 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன காரணம்? தயாரிப்பாளராக எப்படி உணர்ந்தீர்கள்? பதற்றமடைந்தீர்களா?
ப. நிச்சயமாக இல்லை. திரைப்படம் என்பது கற்பனை தொடர்பானது. அதற்கு தேவைப்படும் நேரத்தை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
கே. படத்தில் கலைஞர்களுக்கான ஊதியம், படப்பிடிப்புச் செலவுகள் தவிர, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டது?
ப. ஸ்பெஷல் எஃபக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸிற்காக 200-250 கோடி ரூபாயை செலவழித்திருப்போம்.
கே. 2.0 எந்த அளவுக்கு லாபத்தை கொடுக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?
ப. பெரிய ஒரு லாபத்தைக் கொடுக்குமென்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், எவ்வளவு என்பது இப்போது தெரியவில்லை.
கே. அடுத்ததாக இந்தியாவில், குறிப்பாக தமிழில் என்னென்ன படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
ப. ஏற்கனவே 20 படங்களைத் தயாரித்து வருகிறோம். இதில் 2-3 படங்களை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறோம்.
கே. 2.0 போல பெரும் பொருட் செலவில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை மட்டும்தான் தயாரிப்பீர்களா? சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் எண்ணமிருக்கிறதா?
ப. இல்லை. தரமான கதைகள் இருந்தால், சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிப்போம்.
கே. 2.0 திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தீர்களா?
ப. ஆமாம். படம் வெளியான அன்று சென்னை காசி திரையரங்கில் அதிகாலை நான்கு மணி காட்சியை ரசிகர்களுடன் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் புதுமையாக இருந்தது. நான் வாழ்க்கையில் முதல்முறையாக முதல் நாள் – முதல் காட்சியைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.
கே. நீங்கள் ஐரோப்பாவில் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்துகிறீர்கள். அப்படி இருக்கும் நிலையில், தமிழ்த் திரைப்படத் துறையில் கால் பதிக்க நினைத்தது ஏன்?
ப. தமிழன் என்ற ஒரே காரணம்தான்.
கே. ஐரோப்பாவில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைகா, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இதுவரை ஏன் காலடி பதிக்கவில்லை? நுழையும் திட்டமிருக்கிறதா?
ப. அதற்காக காத்திருக்கிறோம். இந்திய தொலைத் தொடர்புத் துறையில் நுழையும் வாய்ப்பு இருக்கிறதென்றுதான் சொல்வேன்.