டென்மார்க்கில் திரைப்படங்கள் தயாராகி 100 வருடங்கள் தாண்டிவிட்டன. நூற்றாண்டு பழமை மிக்க எத்தனையோ திரைப்படங்கள் செலுலாயிட் பிலிமிலேயே கிடக்கின்றன.
இப்படியே கிடந்தால் இவற்றின் எதிர்காலம் என்ன..?
ஒரு காலத்தில் வாழ்ந்த கலைஞர்கள் அந்தக் காலத்திற்கு ஏற்ப தயாரித்த அரும் பெரும் முயற்சிகள் மக்கி மண்ணோடு போவதுதான் நீதியா..?
இத்திரைப்படங்களை காப்பாற்ற இதுவரை காலமும் புது வழி எதுவும் இல்லாமையால் சிறப்பு இடங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவ்விதம் திரைப்படங்கள், குறும்படங்களாக 415 திரைப்படங்கள் இருக்கின்றன. இவற்றின் காண்பிக்கப்படும் நேரம் 315 மணித்தியாலங்களாகும்.
இருப்பினும் புததிதாக வந்துள்ள டிஜிற்றல் மயப்படுத்தும் தொழில் நுட்பம் இவற்றுக்கு புது வாழ்வும், மறு பிறவியும் கொடுக்க தயாராக இருப்பதால் புதிய கதவுகள் திறந்துள்ளன.
ஆகவே உடனடியாக இவற்றை டிஜிற்றல் மயப்படுத்துங்கள் என்று டென்மார்க்கில் உள்ள மூன்று பெரிய நிறுவனங்கள் 30 மில்லியன் குறோணர்களை வழங்கியுள்ளன. அத்தோடு டேனிஸ் அரசாங்கத்திற்கும் இப்படியொரு சாமான் எங்கோ கிடப்பது தெரியவந்திருப்பது புதுமையாக இருக்கிறது. இவர்கள் 2019 – 2023 ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு இத்திரைப்பட மீட்புப் பணிகளுக்காக 17 மில்லியன் குறோணர்களை ஒதுக்க முன்வந்துள்ளனர்.
டிஜிற்றல் ஸ்கானர் வந்து எத்தனையோ வருடங்களாகியும் இப்போதுதான் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதுதான் ஆறுதால்.
எவ்வாறாயினும் இப்பணியானது அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. சுமார் நான்கு வருடங்கள் கொண்ட நெடிய பணியாகும்.
இவ்வாறு டிஜிற்றலாக மாற்றப்பட்டால் உருவாகும் நன்மைகள் என்ன..?
01. இணையத்தில் தரவேற்றம் செய்து அனைவரும் வேண்டிய நேரம் பார்வையிட வழி செய்யலாம்.
02. டேனிஸ் கலாச்சாரம் எப்படியாக இருந்ததென்ற செய்திகளை வருங்கால தலைமுறையினர் இலகுவாக அறிய முடியும்.
03. ஒரு காலத்து வாழ்க்கை, பின்புல காட்சிகள், மொழி, உரையாடல், உடை என்று பல விடயங்களை அறிய முடியும்.
உதாரணமாக இலங்கையில் கட்டிட கலைஞர் வி.ரி.துரைராஜாவினால் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில்தான் அறுபதுகளின் யாழ்ப்பாணம் தெரிகிறது. இன்று அதற்கான ஆவணங்கள் எதுவும் உருப்படியாக இல்லை. அந்தத் திரைப்படமே ஆதாரமாக இருக்கிறது.
இதுபோல யூலை கலவரத்தில் ஈழத்து தமிழ் திரைப்படங்கள் எரிக்கப்பட்டு, இசைத்தட்டுக்களில் கம்பியால் கிழித்து சேதமடைய செய்தனர். அவர்கள் செய்த செயலால் தம்மைப் போலவே புதிய தலை முறையினர் இன்று வாழ்வையும், வரலாற்றையும் அறிய முடியாத அவலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இத்தகையோர் அறிய வேண்டிய செய்தி இதுவாகும்.
சினிமாவை எதிர்க்கும் கூட்டமும் இதை புரிதல் அவசியமாகும்.
அலைகள் 04.12.2018 செவ்வாய்