நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரை தனது கபட நாடகத்தினால் மயக்கி காதலிக்கச் செய்து பிறகு அவரை உணர்வுபூர்வமாக மிரட்டி மிரட்டி நகைகள், பணம் என்று பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிலிப் என்ற அந்த ஊர்சுற்றி இளைஞரின் வயது 18. இவர் பள்ளியில் படிக்கும் போதே வழிதவறிய ஒரு மாணவர், சக மாணவர்களுடன் தகராறு, கைகலப்பு என்று இருந்து வந்தவர் ஒரு முறை மோதல் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் விடுதலையாகி வெளியே வந்த பிலிப் திருந்தி வாழாமல் மீண்டும் நண்பர்களுடன் உல்லாசமாக ஊர்சுற்றி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியைப் பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து, ஆசை வார்த்தை பேசி, உண்மையான காதலனாக கபடநாடகம் ஆடி அந்தப் பெண்ணைத் தன் காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.
இருவரும் ஊரைச்சுற்றி வந்தனர், இந்நிலையில் பணத்துக்கு எந்த வழியும் இல்லாத பிலிப் காதலியைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். காதலியிடம் அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது, இல்லையென்றால் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்று இரக்கம் ஏற்படுமாறு நடித்துள்ளார். எனக்காகக் காத்திரு படப் பாணியில் இவர் இவ்வாறு தற்கொலை மிரட்டல் விடுத்து அந்த மாணவியிடமிருந்து நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்து தன் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
சில வேளைகளில் மாணவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட செல்போன் படங்களையும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளார்.
இப்படியே 6 மாதகாலம் மாணவியை மிரட்டி மிரட்டி பணம், நகைகளைப் பறித்துள்ளார், மாணவியும் வெளியே சொல்ல முடியாமல் பெற்றொரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்ததோடு நகையையும் பணத்தையும் கேட்கும்போதெல்லாம் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
ஒருநாள் வீட்டில் 28 பவுன் நகைகள் என்னவானது என்று மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது, மேலும் ரொக்கமும் காணவில்லை, இதனையடுத்து மகள் மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் உண்மையைக் கூறிவிடுமாறு வலியுறுத்த மாணவி கூறக்கூற பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து நகை, பணத்தை மீட்டுத்தருமாறு நெல்லை டவுன் போலீஸில் அவர்கள் புகார் அளிக்க, விசாரணையில் மாணவியிடம் கபடநாடகம் ஆடி பணம் பறித்தது தெரியவந்தது, இதனையடுத்து பிலிப்பைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.