ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றபோதிலும், அதனை இந்தியா புறக்கணித்துள்ளது. இந்திய ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
அதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
எனினும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. ஈரானிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவு கணிசமாகக் குறைந்துவருவது தெரியவருவதால் சீனா, இந்தியா, கொரிய குடியரசு, துருக்கி, தைவான் உள்ளிட்ட நாடுகள் தடையிலிருந்து விலக்கு பெற தகுதி பெறுவதாக அமெரிக்கா தெரிவித்தது.
வர்த்தக ஒப்பந்தம், பொருளாதார நடவடிக்கைகளை வைத்து இந்த முடிவை அமெரிக்கா எடுத்தது. எனினும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா அறிவுறுத்தியது.
அமெரிக்கா விலக்கு அளித்துள்ள நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அந்நாட்டுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்கு பதில் இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.
ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் விலைக்கான பாதியளவு தொகையை பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா செலுத்தவுள்ளது.
அமெரிக்கா தடை விதித்துள்ளபோதிலும், உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதற்கு நிகரான தொகை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது கழித்துக் கொள்ளப்படும். டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.