நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வழங்கியிருக்கும் ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயற்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு போகங்களின் போதும் எவ்வித பிரச்சினையுமின்றி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. 2,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புனர்நிர்மாணப் பணிகளுக்கு உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி ஏற்பாடுகளை வழங்கியுள்ளன.
இந்நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு இதற்கு முன்னர் 131 மில்லியன் கனமீற்றர்களாக இருந்ததுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் இதன் நீர் கொள்ளளவு 148 மில்லியன் கனமீற்றர்களாகும். கிளிநொச்சி மக்களுக்கு மேலதிகமாக இந்நீர்த்தேக்கத்தின் நீரை எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களின் தேவைக்காகவும் கொண்டு செல்வது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முறையாக இன்று முற்பகல் நீர் மட்டம் வான் கதவு மட்டத்தை அடைந்ததுடன், நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, இரணைமடு நீர்த்தேக்கம் திறந்து வைக்கப்பட்டதை வடக்கு நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட ஒரு பாரிய யுகப் பணியாகவே தான் கருதுவதாக தெரிவித்தார். வடக்கு மக்களின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்ற அதேநேரம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு இதன் மூலம் பாரிய பலம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் செயற்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியிள் வருகையை அறிந்து பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடியதுடன், அவர்கள் ஜனாதிபதியை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றனர்.
அம்மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்த ஜனாதிபதை அம்மக்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார். தமது நீண்டகால அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நல்ல எதிர்பார்ப்பை வைக்கக்கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்தி தந்தமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்
மேலும் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், சாந்தபுரம் வித்தியாலயத்தின் சில குறைபாடுகள் பற்றி பாடசாலை அதிபர் ஜனாதிபதிக்கு விளக்கினார். அப்பிரச்சினைகளை உடனடியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி வட மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு