ஜேர்மனியின் அரசியல் வானிலும் ஐரோப்பிய ஒன்றிய மேடையிலும் புகழ் பெற்ற இரும்புப் பெண்மணியாக வலம் வந்தவர் ஜேர்மனிய சாஞ்சிலர் ஏஞ்சலா மேர்க்கலாகும். நான்கு தடவைகள் தேர்தலில் வெற்றி பெற்றவர், சுமார் 18 வருடங்கள் புகழ் மிக்க பெண்மணியாக இருந்தவர். உலகின் முதல் பெண்மணியாக பல தடவைகள் தேர்வு செய்யப்பட்டவர்.
கடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றாலும் கட்சி செல்வாக்கிழக்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்குவாரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கட்சியின் புதிய தலைவராக இவருடைய ஆதரவைப் பெற்ற மினி மேர்க்கல் அல்லது ஏ.கே.கே என்று அழைக்கப்படும் அனகிரேற் கிறம்ப் காறின்பேகர் என்ற 56 வயது பெண்மணி தேர்வானார்.
தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் இறுதிச் சுற்றில் மினி மேர்க்கலுக்கு 517 வாக்குகள் கிடைத்தன, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரட்றிக் மாஸ் 482 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
மொத்தம் 1001 கட்சி உறுப்பினரில் 999 பேர் வாக்களித்திருந்தனர். மினி மேர்க்கல் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் கெல்மற் கோல் காலத்து அரசியல்வாதி மேர்க்கலுக்கு வலது கையாக இருந்தவர்.
இவர் சிடியு கட்சியின் சோசலிச அணியையும் வலதுசாரி அணியையும் தழுவி நிற்கிறார். நடைமுறையில் சோசலிச போக்கும் பொருளாதார நிர்வாகத்தில் மேர்க்கலின் முதலாளித்துவ கந்துவட்டி கலாச்சாரத்தையும் பின்பற்றுகிறார்.
மேர்க்கல் தனது தலைவர் பதவி வெளியேற்ற உரையை ஆற்றிய பின்னர் சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கைகளை தட்டி அவரை வாழ்த்தினார்கள்.
கட்சித் தலைவர் பதவியை இழந்தாலும் மற்றைய நாடுகளை போல மேர்க்கல் உடனடியாக சான்சிலர் பதவியில் இருந்து விலகமாட்டார். அவருடைய சான்சிலர் பதவிக்காலம் 2021 வரை தொடர்கிறது. அதுவரை அவர் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
சிரியா நாட்டில் இருந்து அளவுக்கு அதிகமான அகதிகளை ஜேர்மனிக்குள் நுழைய விட்டதால் மேர்க்கல் செல்வாக்கிழந்துள்ளார். ஆனாலும் ஜேர்மனியை இன்று ஒரு வல்லரசாக தூக்கி நிறுத்தியதில் அவருடைய பங்கு மிகமிக பெரியதாகும்.
புதிய தலைவியும் மேர்க்கலின் கையாள் போல தெரிவதால் மேர்கலினுடைய பதவிக்கு நெருக்குவாரம் இப்போதைக்கு வராது. ஆனால் தேர்தலுக்கு முன்னர் புதிய தலைவி சான்சிலராக பொறுப்பேற்றால் ஆச்சரியப்பட இல்லை.
மினி மேர்க்கலின் தயவுள்ளவரை மேர்க்கல் ஆட்சியில் தொடரலாம்.
அலைகள் 07.12.2018 வெள்ளி இரவு