டென்மார்க்கில் பாடசாலைக்கு போவதை வெறுக்கும் பிள்ளைகளின் தொகை அதிகரிப்பதாக சமுதாய நலவாழ்வு பிரிவு நடத்திய ஆய்வு வெளியானது.
அதேவேளை குடும்பப் பின்னணி பிள்ளைகளின் கல்வி மீதான நாட்டத்தை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாகவும் தெரிவிக்கிறது. மொத்தம் 7697 பிள்ளைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிள்ளைகள் 3 வயது முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களாகும்.
15 வயது பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் 2009ம் ஆண்டில் பின்தங்கிய குடும்பப் பிள்ளைகளின் தொகை எட்டு வீதமாகும். அதேவேளை இந்தத் தொகையானது 2017ம் ஆண்லோ 12 வீதமாக உயர்வு பெற்றுள்ளது.
ஆகவே பின்தங்கிய குடும்பங்களின் எண்ணிக்கையின் உயர்வானது பாடசாலை போவதை வெறுக்கும் மாணவர் தொகையையும் உயர்த்துவதாக இருக்கிறது.
வசதி கூடிய குடும்பங்களின் பிள்ளைகள் வேக வளர்ச்சி பெற, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வந்த பிள்ளைகள் பின்னடைவு கண்டு சென்றுள்ளன.
இதற்கு பொருளாதார பின்னடைவுதான் தீர்க்கமான காரணம் என்று கூற முடியாவிட்டாலும் குடும்பச் சூழலால் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து பின்னேறுகிறார்கள் என்பது மட்டும் உண்மையென்று, ஆய்வுக்கு பொறுப்பாக இருந்த பெண்மணி கூறுகிறார்.
ஏழு வயது பிள்ளைகளிடையே பாடசாலை போக விரும்பும் பழக்கம் 2009 ல் 64 வீதமாக இருந்து 2017ல் 82 வீதமாக உயர்வு கண்டுள்ளது.
15 வயதுக்குரிய மாணவர்களை எடுத்துக் கொண்டால் 2009 ல் பாடசாலை போக விரும்பும் மாணவர் தொகை 41 வீதமாக இருந்தது 2017ல் இது 32 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
உலகமயமாக்கலுக்காக டென்மார்க் எடுக்கும் வேகத்திற்கு ஏற்ப ஓடமுடியாமல் இந்த மாணவர்கள் பின்தங்க நேரிடுகிறது. அதேவேளை நவீன தொழில் நுட்பம் இணையம் என்பன வளர்ந்திருப்பதால் முன்னைய காலங்களை விட இவர்கள் கூடுதல் அறிவு பெற்றிருக்கிறார்கள். முன்னைய காலத்தில் இருந்த பாதுகாப்பைவிட இப்போது நகரசபைகளின் உதவி உறுதியாக இருப்பது மேலும் ஒரு சிறப்பான பாதுகாப்பு என்கிறது ஆய்வு.
வயது கூடக்கூட பரீட்சைகள் வரும், மாணவர்களால் சித்தியடைய முடியாதபோது பாடசாலைகள் மீது வெறுப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் முடியாதன்றோ..?
ஆசிரியர்களினால் எல்லோரையும் முதற் பிள்ளையாக்க முடியாது. அந்தக் காலத்திலும் இந்தப் பின்னடைவு இருந்தது, அது நவீன யுகத்திலும் தொடரத்தான் செய்கிறது.
ஆனால் பழைய காலத்தில் பணக்கார வீட்டு பிள்ளைகள் படிக்காதவர்களாகவும் ஏழைகளின் பிள்ளைகள் நன்கு படிக்கக் கூடிய பிள்ளைகளாக இருந்ததாகவும் கூறுகிறது. இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.
அலைகள் 07.12.2018 வெள்ளி இரவு