அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் திரு. அருளானந்தசோதி உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை தாயகத்தின் உதைபந்தாட்ட வீரர்களுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் வழங்கி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
வல்வை எப்.சி. இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அதிகாரியுமான ஜிவிந்தன் நூல் வழங்கும் ஏற்பாடுகளை ரியூப் தமிழுடன் இணைந்து மேற்கொள்ள களை கட்டியிருக்கிறது வடக்கின் உதைபந்தாட்டம்.
இனி விபரமாக…
அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறப்போகும் தமிழ் வீரர்கள் யார்.. எத்தனை பேருக்கு வாய்ப்புக்கள் உள்ளன..?
இன்று வடக்கே ஒளிரும் பரபரப்பான கேள்வி இதுதான். பலர் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக தெரிகின்றன என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.
இலங்கை அணிக்கு பருத்தித்துறை லீக்கில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகள் இன்றிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன.
இந்தப் போட்டிகள் இன்று காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. 23 வயதுக்கு உட்பட்டவர்களே இந்த ஆட்டங்களில் ஆட முடியும்.
அகில இலங்கை அணிக்கான உதைபந்தாட்ட நிபுணர்கள் இப்போது வடக்கே வந்துள்ளனர். தேர்வு செய்யப்படும் வீரர் கொழும்பு சென்று அங்கு தங்கியிருந்து லீக் ஆட்டங்களில் பங்கேற்று, தம்மை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். இலங்கை அணியை ஆசிய அரங்கில் வெற்றி அணியாக மாற்ற வேண்டும்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்திற்கான பீபா அமைப்பு அடுத்து வரும் காலங்களில் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த இருப்பது இலங்கை அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியே. அந்த வாய்ப்பு எங்கோ ஒரு ரயில் வண்டிபோல புறப்பட்டுவிட்டது. இனி அதை சரியாகக் குறி வைத்து பற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக திட்டமிட வேண்டும். தமிழர்கள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் காலம் தானாக மலராது நாம்தான் மலர வைக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம்..? வேறு எந்த குறுக்கு வழிகளும் இல்லை. இப்போதே திட்டமிட்டு தயாராக வேண்டும். சும்மா தயாராக முடியுமா.. முடியாது. முதலில் நம் பிள்ளைகள் உள்ளத்தில் ஒரு தீப்பொறி கிளம்ப வேண்டும். அதை கிளப்ப வேண்டுமானால் அதற்கான தகவல்கள் அடங்கிய விதைகளைத் தூவ வேண்டும்.
அந்த விதைகள் அடங்கிய பெட்டகமே உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலாகும்.
அதை குறியாகக் கொண்டு, நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு டென்மார்க்கில் வாழும் எழுத்தாளர் கி.செ.துரையால் எழுதப்பட்டதே உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகமாகும்.
இந்த நூல் தாயக இளைஞர்கள் மனதில் கனவுகளை விதைக்கும். வழமையான புதர் மூடிய பாதையில் பயணிக்காது புது வழியில் கால்பதிக்க முதல் விளக்கேற்றி வைக்கும்.
இலங்கை புத்தகக் கடைகள் பாடக்கொப்பியும் பென்சிலும் விற்பதற்கு மேல் தமது வர்த்தகத்தை நடத்த முடியாது, இந்திய ரமணிசந்திரன் நாவல்களுக்குள் தொலைந்துவிட்டன.
இவர்களோடு இனியும் மாரடிக்க முடியாது. நமக்கான அறிவியல் நூல்களை புது வழியில் சந்தைப்படுத்த வேண்டுமென களமிறங்கியிருக்கிறது ரியூப் தமிழ் நிறுவனத்தின் இலங்கைப் பிரிவு. பெரும் பொருட் செலவில் தாயக இளைஞர்களால் லாப நோக்கற்ற இந்தத் தியாகப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டதை அறிந்தவர் எவரும் இல்லை.
இந்த அறிவியல் செல்வமானது இந்த வீரர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரியூப் தமிழ் புத்தகச் சந்தை என்பது வருமானத்திற்காக புத்தகங்களை விற்கப்புறப்பட்டிருக்கிறது என்பதல்ல இலக்கு. நமது சமுதாயத்தை சிந்தனை ரீதியாக மேம்படுத்தும் வழியில் கால்பதித்துள்ளது என்பதே இதன் இலக்காகும்.
இப்போது வடக்கு கிழக்கை இணைத்து நடைபெறும் உதைபந்தாட்ட லீக் ஆட்டம் உருவாக பெரும் முதலிட்டு விதை போட்டது ரியூப் தமிழ் நிறுவனமே. இப்போதும் எப்போதும் அதன் பணிகள் களைப்பின்றி நம் மக்களுக்காக நாளும் நாளும் புதிய வியாபகம் பெறும் என்கிறார் தாயகத்திலிருந்து ரியூப் தமிழ் நிர்வாகி திருமதி டிவான்யா முகுந்தன்.
இன்றைய நூல் வழங்கும் நிகழ்வு டென்மார்க்கில் வாழ்ந்து மரணித்த இளைஞன் அமரர் ஜெனிஸ்சன் சிவகுமார் நினைவாக வழங்கப்பட்டுள்ளன.
நாளையும், நாளை மறுதினம் நிறைவு நாளிலும் தொடர்ந்து வழங்கப்படும். அனைத்தும் ரியூப் தமிழ் ஊடக அனுசரணையுடன் நடைபெறுகிறது. இதற்கான காணொளிகள் வெளிவரும்.
அலைகள் 08.12.2018 சனி மதியம்