எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ‘நீதிக்கான போராட்டம்’ எனும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு விரோதமானது எனவும், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடு எனவும் கூறி நாடளாவிய ரீதியில் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என்பவற்றால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்பு காலிமுகத்திடலில் பாரியதொரு மக்கள் ஆர்ப்பாட்டத்தினை நீதிக்கான போராட்டம் எனும் பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.