பிரான்சில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 125.000 பேர்வரை பங்கேற்றுள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது. ஒளியை திருப்பி அடிக்கும் தன்மை கொண்ட மஞ்சள் அங்கி அணிந்தோர் போராட்டமானது வழமை போலவே இரத்தம் சிந்திய போராட்டமாகவே அமைந்தது.
ஆர்பாட்டங்கள் நடைபெற்ற மாலை கருத்துரைத்த பிரான்சிய உள்துறை அமைச்சர் சுமார் 19.30 மணியளவில் நிலமை கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், ஆனால் நடந்த அனர்த்தங்கள் எதையுமே தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
சுமார் 1700 பேர்வரை கைதாகியிருக்கிறார்கள், 17 போலீசார் காயமடைந்துள்ளனர். 125.000 பேர் நாடு முழுவதிற்குமான ஆர்பாட்டக்காரர் தொகையாகும், தலைநகர் பாரீசில் பங்கேற்றவர் தொகை 10.000 ஆகும். 135 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆர்பாட்டக்காரர் கடைகளின் சன்னல்களை உடைத்துதள்ளினார்கள், பல இடங்களில் தீ மூட்டினார்கள். போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரருக்குமிடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. கண்ணீர்புகை அடித்து நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
எரிபொருள் விலையேற்றத்தில் ஆரம்பித்த போராட்டம் இப்போது அதிபர் எமானுவல் மக்ரொங்கின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக திசை திரும்பியிருக்கிறது. இதேவேளை மஞ்சள் அங்கி அணிந்தோர் போராட்டம் பிரான்சில் மட்டும் நடைபெறவில்லை அது அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. கொலன்ட், பெல்ஜியம் நாடுகளிலும் பரவலடைந்தது.
பெல்ஜியம் தலைநகர் புறுசெல்சில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 400 பேர் கைதாகியிருக்கிறார்கள். ஆனால் கொலண்டில் ஆர்பாட்டங்கள் அமைதியாகவே நடைபெற்றன. ஆர்பாட்டக்காரர் பாடல்களை பாடியபடி மலர்களை வழங்கிச் சென்றார்கள். பூவுக்குள் மறைந்துள்ள பூகம்பம் எப்போது வெடிக்கும் என்பதையாரறிவார்..?
இதுபோல மஞ்சள் ஆடை அணிந்த போராட்டம் ஹங்கேரியிலும் நடைபெற்றது. தலைநகர் புடாபெஸ்க்கில் அரசை எதிர்த்து கோஷமெழுப்பினார்கள். ஹங்கேரியில் இயற்றப்பட்டுள்ள சட்டமொன்றை எதிர்த்து களமிறங்கியது இந்த ஆர்பாட்டப் பேரணி. இவர்கள் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பான் இயற்றிய புதிய தொழிலாளர் சட்டம் அடிமைகள் சட்டம் என்று குரல் கொடுத்தார்கள். பென்சன் சீர்திருத்தம் அங்கும் ரஸ்ய பாணியில் வந்துள்ளது.
பிரான்சிய அமைச்சர் நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினாலும் இந்த ஆர்பாட்டங்கள் முடிந்துவிட்டதாக பொருள் கொள்ளலாகாது. அடுத்த வாரமும் தொடரலாம். காரணம் ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசால் நிறைவேற்ற முடியாதவை என்பது ஆர்பாட்டக்காரருக்கும், அரசுக்கும் தெரிந்த விடயமே.
மாறாக ஐரோப்பா முழுவதும் இது பரவினால் அடுத்த பத்தாண்டுகளில் வரவுள்ள பாரிய பிரச்சனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் விரைவாகவே சந்திக்க நேரலாம். மற்றய போராட்டங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. இதற்கு முடிவில்லை அடுத்தது இது ஐரோப்பா முழுவதும் விஷம்போல பரவும் தன்மையும் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு குறியீடுகளும் எதிர்கால அடிப்படையில் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு நல்ல விடயங்கள் அல்ல.
இந்தச் சூறாவளி அகதிகளுக்கு எதிராக திசை திரும்பும் ஆபத்தில்லா போராட்டம் என்று அடித்து சத்தியம் செய்ய முடியாது.
இவ்வளவு நடந்தும் பிரான்சிய அதிபர் வாய் திறக்காமல் இருக்கிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. திங்கள் அவர் வாய்திறப்பார் என்று செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க அதிபர் இந்த ஆர்பாட்டங்களை வழமைபோல கேலி செய்து ரிவீற் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ப் தமது நாட்டு விவகாரத்தில் தேவையற்று தலைப்போட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
அலைகள் 09.12.2018 ஞாயிறு