பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான யோசனைகள் வாக்கெடுப்பிற்கு வரவேண்டியது அவசியம் என்பது இதுவரை நாம் அறிந்த செய்தியாகும்.
இதற்கான வாக்கெடுப்பு பிரிட்டன் பாராளுமன்றுக்கு வரும் செவ்வாய் வருகிறது. இப்போதைய தகவல்களின்படி வாக்கெடுப்பு நடந்தால் தெரேசா மே தோல்வியடையக்கூடிய தடயங்கள் தென்படுவதாகவும், இதனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க யோசிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கருத்தை தற்போது பிறிக்ஸ்ற் வெளியேற்றத்திற்கு பொறுப்பாக இருக்கும் மந்திரியான ஸ்ரெபன் பாக்ளே பீ.பீ.சிக்கு தெரிவித்துள்ளார். ஆனால் இவருடைய உதவி மந்திரியோ கவலையே வேண்டாம் வாக்களிப்பில் வெற்றி பெறுவோம் என்கிறார்.
இந்த இக்கட்டான நிலையில் ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றத்தைவிட, தனது பதவியைக் காப்பாற்றுவதே தெரேசா மேக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது என்பதே யதார்த்தமாகும்.
வாக்களிப்பு நடைபெற்றால் எதிர்க்கட்சியான லேபர், மற்றும் வட அயர்லாந்து ஆதரவு கட்சியான டி.யூ.பி என்பன எதிர்த்து வாக்களிக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.
பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தால் எழக்கூடிய சிக்கல்கள் பல புத்தாண்டு பட்டாசுகள் போல வெடித்து சிதற தயாராக இருக்கின்றன.
அதில் ஒன்று அயர்லாந்து – வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கிடையே உள்ள வரிவிதிப்பு பிரச்சனையாகும். அது இன்னமும் முடிந்தபாடில்லை. இந்த சிக்கலை உடனடியாக தீர்க்க முடியாது. ஆகவே சரியான ஓர் இலக்கை எட்டித் தொடும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய வரிவிதிப்பு எல்லைக்குள்ளேயே இருப்பதென்பது தெரேசா மேயின் புதிய திட்டமாகும்.
மேலும் வரும் மார்ச் 29ம் திகதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினாலும் கூட, மற்றைய பிரச்சனைகளை பேசித்தீர்க்க மேலும் இரண்டு வருடங்கள் கால நீடிப்பு பெறவும் தெரேசா மே திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அவருடைய கொன்ஸ்சவேட்டிவ் கட்சிக்குள் தெரேசா மேயை வீழ்த்தி பிரதமர் பதவியில் இருக்க பொறிஸ் ஜோன்சன் உட்பட பலர் ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு இதைவிட்டால் வேறு சிறப்பான தருணங்கள் இல்லை.
லேபர் கட்சியும் நீண்ட காலமாக பதவியில் இல்லாமல் இருப்பதால் பதவியில் உட்காரும் தாகத்தில் இருக்கிறது.
இந்த இக்கட்டான நிலையில் இருக்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிக்கிறது பிரிட்டன்.
நம்முடன் பேச எதுவும் இல்லை அங்குள்ள உள் வீட்டு சண்டைகளை முடித்துவிட்டு வாருங்கள் என்று 600 பக்கங்கள் கொண்ட யோசனைகளை வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே தட்டிப் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டது ஐரோப்பிய ஒன்றியம்.
உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி..! மண்ணோடு மறையும் நாள்வரை தொடரும் சாந்தி..! என்று பிரிட்டனை பிரியாமல் பிரிகிறது ஐரோப்பிய ஒன்றியம்.
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி உன் பிரிவினில் இலையே சாந்தி என்பது பிரிட்டனின் குழப்பமான நிலை..
அலைகள் 09.12.2018 ஞாயிறு