என்னுடைய 44 வருட சினிமா வாழ்க்கையில், ரெண்டு மூணு நல்ல மனிதர்களை பாத்துருக்கேன். சசிகுமார் அப்படிப்பட்ட நல்ல மனிதர். தாடி வைச்ச குழந்தை அவர் என்று பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.
‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
‘பேட்ட’ படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
” ’பேட்ட’ படத்தில் மாலிக் என்றொரு கேரக்டர். கிட்டத்தட்ட 20 நாள் ஷூட்டிங்ல இருக்கணும். இந்தக் கேரக்டருக்கு யார் யாரையெல்லாம் போடலாம்னு யோசிச்சதைச் சொன்னா, அந்தப் பேரையெல்லாம் சொன்னா, ஆச்சரியமாயிருவீங்க. கார்த்திக், இந்தப் படம் ஷோலே மாதிரி பிரம்மாண்டமான படமா ஆயிரும் கார்த்திக்னு சொன்னேன்.
கடைசிக் கட்டத்துலதான் கார்த்திக் வந்து, இந்தக் கேரக்டருக்கு சசிகுமார் சார்கிட்ட கேட்டேன். சரின்னு சொல்லிட்டார்னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு.
படம் ஷூட்டிங் சமயத்துல சசிகுமார்கிட்டே நிறைய பேசிட்டிருந்தேன். என்னோட 44 வருஷ சினிமா வாழ்க்கையில, ரெண்டு, மூணு நல்ல மனிதர்களைப் பார்த்து பிரமிச்சிருக்கேன். இப்படிலாம் ஒரு நல்ல மனசோட ஒருத்தர் இருக்க முடியுமான்னா, அது சசிகுமார். அப்படியொரு நல்லவர் அவர். நல்லது செய்யணும்னே நினைச்சிட்டிருக்கறவர். செயல்பட்டுக்கிட்டிருக்கறவர்.
சசிகுமார், ஒரு தாடி வைச்ச குழந்தை. அப்படியொரு மனசு அவருக்கு. சசிகுமார் நல்லாருக்கணும். சொந்தப் படமெல்லாம் எடுக்காம, நல்ல நல்ல கேரக்டர்கள் செஞ்சு நடிச்சிக்கிட்டே இருக்கணும்”.
இவ்வாறு ரஜினி பேசினார்.