தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்று கொண்டார். தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இதேபோல் பாஜக வசம் இருந்த மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. குறிப்பாக 5 மாநிலங்களிலும் போட்டியிட்ட பாஜக-வால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபாரமாக வெற்றி பெற்றது. 21 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது, பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால் தெலுங்கனாவில் அறுதிபெரும்பான்மையுடன் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. இதேபோல் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட ஒருமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தெலுங்கானா முதல்வராக இன்று சந்திரசேகர ராவ் பதவியேற்று கொண்டார். 2-வது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராகி உள்ளார். இன்று மதியம் 1.25 மணிக்கு சந்திரசேகர ராவ் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரசேகர ராவுடன் தெலுங்கானாவின் முன்னாள் துணை முதல்வர் முகமது அலியும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஒரு வாரத்திற்கு பிறகே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.