உலகப்புகழ் பெற்ற நூல்களில் இருந்து வரும் குறும் தகவல்கள் இருபத்தைந்து..
01. பழக்கம் என்பது ஒரு கயிறு போன்றது. தினமும் அதன் ஒரு சரடை நாம் நெய்கிறோம். கடைசியில் அது அறுக்க முடியாத வகையில் பலப்பட்டுவிடுகிறது.
02. வெற்றியாளர்களை உற்று நோக்கினால் அவர்கள் எல்லோரிடமும் சில அம்சங்களில் பொதுவான ஒற்றுமை இருக்கக் காண்பீர்கள். ஆலமரத்தின் விதையில் இருந்து அரச மரம் முளைக்காது என்பது போல வெற்றியாளர்களின் விதைகளில் இருந்தே அவர்களும் எழுகிறார்கள்.
03. பிரபஞ்சத்தின் இயக்க விதியுடன் கண்ணுக்கு தெரியாமலே ஒவ்வொரு மனிதனும் பிணைக்கப்பட்டுள்ளான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவை விரும்பிய இலட்சியம் நோக்கி நீங்கள் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள்.
04. மனிதன் ஒவ்வொரு முறை தடுக்கி விழும்போதும் தான் தேடும் நிஜங்கள் மீதே தடுக்கி விழுகிறான். பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொள்ளாது மறுபடியும் எழுந்து நடக்கிறார்கள். விழுந்த இடத்தை கூர்ந்து பாருங்கள் அங்கு ஏதோ இருக்கிறது.
05. தோல்வியடைந்த ஒரு மனிதன் வெற்றியீட்டிய ஒருவருடன் இணைந்து செயற்படுகிறபோது தோல்வி விலகிக்கொண்டுவிட, சட்டென அவனிடம் பெரிய வெற்றி வந்து சேர்கிறது.
06. பிரபஞ்ச இயக்க விதிமுறை வெற்றி மனோபாவத்தை வெற்றியாளரிடமிருந்து தோற்றவர்களுக்கு அஞ்சல் செய்கிறது. எப்போதெல்லாம் இரண்டு மனங்கள் பலமாக இணைகின்றனவோ அப்போதெல்லாம் புதிதாக ஒரு மூன்றாவது மனம் உற்பத்தியாகிறது.
07. தங்கள் கருத்துக்கு இயைபான மனிதர்களுடன் இணைந்து செயற்படும்போதுதான் வெற்றிகள் சாத்தியமாகின்றன என்று பல வெற்றியாளர்கள் கூறுகிறார்கள்.
08. தொட்டு உணரக்கூடியதாகவும், திடமானதாகவும் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் பிரபஞ்ச விதிதான் ஆதாரமாக அமைந்திருக்கிறது. ஆனால் அதை மட்டும் கண்ணால் காணவோ தொட்டுணரவோ முடியாது.
09. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்களோ அந்த இடத்திற்கு உங்கள் எண்ணங்களே உங்களை எடுத்துவந்து நிறுத்தியிருக்கின்றன. மேலும் நீங்கள் இனி என்ன நினைக்கிறீர்களோ அதற்கேற்ப நாளை வேறோர் இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்படுவீர்கள்.
10. பழக்க வழக்கம் என்னும் சொல் ஒரு சுய வெளிப்பாட்டின் அடையாளமாகும். எண்ணங்களை வடிவமைப்பதன் மூலம் பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த எண்ணங்கள் ஒன்றுதான் மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
11. நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவதன் மூலமும் தீய எண்ணங்களை ஏற்படுத்துவதன் மூலமும் ஒருவன் தன் தலைவிதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறான். ஆகவே நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
12. வெற்றியின் உச்சத்தைத் தொட்ட பலர் முன்னர் கடுமையான தோல்வியில் அகப்பட்டு மனம் நொந்து போனவர்களாகவும் இருந்ததுண்டு. வெற்றியின் பக்கம் இவர்கள் திசை திரும்பிய அந்த விநோத மாற்றம் எப்படி நடந்தது..? பிரபஞ்ச இயக்க விதிமுறைகளை அறிந்து அவற்றை அங்கீகரித்துக் கொண்டதால் இவர்கள் மட்டும் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள்.
13. மனிதர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து போகாததால் போர்கள் வலுக்கின்றன. ஜனங்களின் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களின் விளைவுதான் இது. ஒரு தேசத்தில் வாழும் பெரும்பாலான மக்களின் உணர்வுதான் அந்த நாட்டில் நடக்கும் செயலாக இருக்கிறது. இது நாட்டின் தலைவிதி. ஒரு நாடு பகையும் போருமாகக் கிடக்கிறதென்றால் அங்குள்ள பெரும்பாலான மக்களே அதற்கு பொறுப்பு.
14. பிரபஞ்ச இயக்கவிதி நீங்கள் நல்லதை நினைக்கிறீர்களா இல்லையா என்று பார்ப்பதில்லை. நீங்கள் சிந்திக்கும் பழக்கத்தின் துணையுடன் அதை உடலியக்க அமைப்புக்களுடன் தொடர்புபடுத்தி, நாளாவட்டத்தில் உங்கள் லட்சியங்களில் ஒன்றாக உங்களை உருவாக்கிவிடுகிறது.
15. சிந்திக்கும் பழக்கம் தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. குழுவாக உள்ள ஓர் அமைப்பில் ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கிறான். அந்த செயலின் தாக்கமே ஓர் அமைப்பாக உருவெடுக்கிறது. அந்த அமைப்பு இலட்சியங்களில் இருந்து தொலைந்து கொள்ளைக்கார அமைப்பாக மாற அதிகரிக்கும் அங்கத்தவர்கள் தீயவர்களாக இருப்பதே காரணமாகும்.
16. நோயைப்பற்றி ஒருவன் பேசினாலும் சிந்தித்தாலும் அது அவனை பாதிக்கவே செய்கிறது. படிப்படியாக அவன் ஒரு கற்பனை நோயாளியாகவே மாறுகிறான். ஆகவே நோயை பற்றி கூட்டம் போட்டு பேசும் கோமாளிகளுக்கு அருகில் போக வேண்டாம். சமூக வலைத்தளங்களில் பரவிக்கிடக்கம் இலட்சக்கணக்கான டாக்டர்களின் கதை கேட்டு அலைக்கழிய வேண்டாம்.
17. ஒரு கற்பனை நோயாளி நாளாவட்டத்தில் எந்த நோயை அழைக்கிறானோ ஈற்றில் அந்த நோயில் தானாகவே விழுந்துவிடுகிறான்.
18. எந்த ஓர் எண்ணம் தொடர்ந்து மனதில் ஏற்பட்டாலும் அதன் விளைவு உடலிலும் தென்பட ஆரம்பித்துவிடும். வறுமை பற்றிய எண்ணம் மனதில் வந்தால் பாவம் அவர்களை வறுமை பற்றிக்கொண்டுவிடும்.
19. செல்வத்தின் மீது விருப்பமிருந்தால் அதை நிறைய உருவாக்குமாறு மனதிற்கு ஆணையிடுங்கள். இது செழுமையான மனோபாவத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு உங்கள் பொருளாதார நிலை எவ்வளவு சீக்கிரம் முன்னேறுகிறது என்று பாருங்கள்.
20. எதையுமே படைக்க வல்ல கடவுளாக நீங்களும் மாறலாம். கடவுள்போல நீங்களும் விரும்பியதை உருவாக்கிக் கொள்ள முடியும். காரணம் மன உணர்வு உங்கள் பொறுப்பில் உள்ள ஒன்றாகும். தினமும் சிந்திப்பதன் மூலமாக இதை உருவாக்கு முடியும்.
21. ஆரோக்கிய குறைவு, வறுமை போன்றவற்றை அங்கீகரிப்பது தன்னம்பிக்கைக் குறைவு தன்னிடம் இருப்பதை ஒப்புக் கொள்ளும் செயலாகும். நிறைய மனிதர்கள் தோல்வி பாதுகாப்பானது என்று கருதி அதையே சிந்திக்கவும், அடிமையாக இருப்பதே பாதுகாப்பென்று கருதி பிடிவாதமாக அடிமைகளாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும்.
22. நீங்கள் நம்பிக்கையுள்ள மனிதர் என்று உரக்கச் சொல்லுங்கள். சொற்களின் அடிப்படையில்தான் உங்கள் செயல்கள் அமைகின்றன.
23. நம்பிக்கை என்பது ஒரு மனோநிலை தொடர்ந்த செயற்பாடுகள் மூலம்தான் அது நிரந்தரமாக மாறுகிறது. ஆனால் நம்பிக்கை மட்டும் போதுமானதாகிவிடாது என்பதையும் உணர வேண்டும்.
24. பிரபஞ்ச இயக்கவிதி அல்லது உலகியல் நியதி என்று கூறப்படும் இந்த ஆற்றல் எல்லோருக்கும் பொதுவானது. ஏழை பணக்காரன் என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இதுவே மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடியது.
25. பழக்கம் என்பது குடியேறிவிட்ட ஓர் எண்ணத்தின் தூண்டுதல். திரும்பத் திரும்ப ஒரு காரியத்தை செய்வதால் உருவாகிறது. இதனால்தான் நிறைய தப்பான காரியங்களை இயந்திரத்தனமாக செய்து ஈற்றில் அவற்றிடம் மாட்டிவிடுகிறோம்.
அலைகள் பழமொழிகள் தொடரும் 14.12.2018