நேற்றும் நேற்று முன்தினமும் போலந்து நாட்டு தலைநகர் வார்சோவில உலக பருவநிலை மாநாடு கோப் 24 நடைபெற்றிருக்கின்றது.
இதில் 200 வரையான உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக பிரான்சில் எடுக்கப்பட்ட பருவநிலை மாநாட்டு தீர்மானங்களை அடியொற்றி இப்பொழுதும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தலைவர்கள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை, இதன் காரணமாக மாநாடு இன்றும் தொடர்ந்தது.
” உலகத்தின் பெரிய நாடுகள் சுயநலம் விட்டு, அழியும் உலகை காக்க உதவ வேண்டும் ” என்று உலகின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் தம்மைத் திருத்திக் கொண்டு, கருத்தை மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளன.
அதேவேளை தாய்லாந்து நாட்டில் கடலடியில் உள்ள பவளப்பாறைகள் வேகமாக அழிவதாக இன்றைய டென்மார்க் காலைச் செய்தி கூறுகின்றது. மேலும் தாய்லாந்தில் மில்லியன் கணக்கில் வரும் உல்லாசப் பயணிகள் தமது உடம்பில் சூரிய ஒளி தாக்காது கிறீம்களை போட்டுக்கொண்டு கடலில் குளிக்கிறார்கள்.
இதனால் அந்த இரசாயன பதார்த்தங்கள் கடல் நீரோடு கலக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இப்பகுதியில் வீசப்படும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களும் பவள பாறைகளை அழித்து வருவதாகவும் செய்தியாளர் கூறுகிறார்.
இதை பெரிதபடுத்த தாய்லாந்து அரசு விரும்பவில்லை. ஏனென்றால் வருகின்ற உல்லாசப் பயணிகள் தான் வருமானத்தை தருகிறார்கள் என்பதனால் அவர்கள் இதில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
மில்லியன் கணக்கில் அவர்களுடைய விமான நிலையத்தில் பயணிகள் வருவதனால், இந்த கடல் பகுதியில் மேலும் ஒரு விமான நிலையத்தை அமைக்க போவதாக கூறுகிறார்கள். அவர்கள் இயற்கையின் அழிவு பற்றி அக்கறை கொள்ளவில்லை என்று அந்த செய்தி கூறுகின்றது.
இப்போது தாய்லாந்து கடற்கரைகளில் ரஷ்யர்களும், சீனர்களும் இலட்சக்கணக்கில் குவிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனால் இந்த அழிவுகள் மேலும் மேலும் மோசமடைந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உண்மையில் உலகத்தை பாதுகாக்க வேண்டியது அதிகாரமும், ஆயுதங்களும், அணுகுண்டுகளும், ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரமும் இருக்கின்ற வல்லரசுகள்தான்.
ஆனால் அந்தோ பரிதாபம் அதிகாரம் இல்லாத நிராயுதபாணிகளான ஏழைகள்தான், உலகத்தை பாதுகாக்க வேண்டுமென்று போராடுவதையும காணக் கூடியதாக இருக்கிறது.
உலகம் முக்கியமா ? நமது நாட்டின் புகழ் முக்கியமா ? என்ற கேள்விக்கு அதிகார வர்க்கத்தினர் தமது நாடே முக்கியம் என்று கருதுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் உலகம் முக்கியமாக தெரியவில்லை!
” உலகம் இல்லை என்றால் நாடுகள் இல்லை என்பதை கூட, புரியாத அறியாமை நிலவுவதை இந்த பருவநிலை மாநாடுகள் காட்டுகின்றன” என்ற வருத்தம் பூமியை நேசிப்போரிடையே உள்ளது !
அலைகள் 15.12.2018