மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியதாக ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.
பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மக்களுக்கு பொதுத் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.
பொதுத் தேர்தல் இன்றி பிரதமராக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்பதாலும் தீர்மானங்கள் எடுக்கும் போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்கும் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழிவிடுவதாக அவர் கூறியுள்ளார்.
மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் எமது பிரதான இலக்காக இருப்பது, இன்றாகும் போது ஒரு வருடமும் மூன்று மாதங்களால் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே.
தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்பொடுவதற்கே அவர்கள் திட்டுமிடிகின்றார்கள் என்று மஹிந்த ரஜபக்ஷ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.