சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திமுக தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்.
மேலும், தமிழகம் முழுவதும் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே கலைஞருக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொள்வதற்காக சேனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைத்தார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்தி உள்ளிட்ட திரைத்துறையினர் விழாவில் பங்கேற்றனர்.
சிலை திறப்பு விழா முடிந்தவுடன் சோனியாகாந்தி, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் மத்தியமைச்சர் தயாநிதிமாறன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெறுவதையொட்டி சோனியாகாந்தி, ராகுல் மற்றும் அண்டை மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். இதனையடுத்து கருணாநிதி சிலை திறக்கப்படும் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டையில் பொதுக் கூட்ட வளாகம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.