ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர்வதை சபாநாயகருக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்க எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையடல் செவ்வாய் கிழமை காலை இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
—————-
புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (16) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் சமன் ஏக்கநாயக்க பிரதமரின் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியுமாவார்.
இளைஞர் அலுவல்கள், வீடமைப்பு, வெளிநாட்டலுவல்கள், நிதி மற்றும் ஊடக அமைச்சுக்களின் உயர் பதவிகளை வகித்துள்ள இவர் மலேசியா மற்றும் இங்கிலாந்தின் இலங்கை தூதரகங்களிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
—————-
இந்தியாவின் அயல் நாடும் நட்பு நாடுமான இலங்கை அரசியில் இடம்பெற்ற மாற்றங்களை வரவேற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 52 நாட்களாக இடம்பெற்று வந்த அரசியல் குழப்ப நிலைகளைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியனம் பெற்றதன் பின்னர் இந்தியா வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ரவீஷ் குமார், இந்தியாவின் நெருங்கிய அண்டை மற்றும் உண்மையான நண்பனாக, இலங்கையில் அரசியல் நிலைமை பற்றிய தீர்மானத்தை இந்தியா வரவேற்கிறது. இது அனைத்து அரசியல் சக்திகளாலும் நிரூபிக்கப்பட்ட முதிர்ச்சியின் பிரதிபலிப்பு, இலங்கை ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீள் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
அத்துடன் இலங்கையில் மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் இந்த மாற்றத்தின் இந்தியா-இலங்கை உறவுகள் ஒரு முன்னோக்கிய பாதையில் செல்ல தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.
—————–
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, அடுத்த 48 மணித்தியாலங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும் நாளைய தினமே புதிய அமைச்சரவை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய புதிய அமைச்சரவையில் 30 உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற யோசைனையும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைச் சுப்பதவிகளை பகிர்ந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.