முதலில் யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரை இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்திவேல் தெரிவித்தார்.
இதேவேளை, யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களைக் காட்டிக்கொடுக்க முடியாது. யுத்தத்தின் போது இரு தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்தன. எனவே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின், யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான இராணுவ வீரர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து இன நல்லிணக்கத்துக்கு எதிரான கூற்று என்றே கருத வேண்டியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமராக பதவிப்பிரமாணம் வழங்கிய பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த காலகட்டத்தில் இராணுவத்தினர் தவறிழைத்திருந்தாலும், அவர்களை விட தவறிழைத்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் இராணுவத்தினரை மாத்திரம் தண்டிக்க முடியாது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டுமாயின் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் வினவிய போதே அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.