நீ தானா அந்த குயில் படத்தில் ‘பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது’ பாடல் மூலம் அறிமுகமாகி முன்னணி பாடகியாக உயர்ந்தவர் சித்ரா.
சின்னக்குயில் பாடும் பாட்டு, நீ ஒரு காதல் சங்கீதம், குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா, பாடறியேன் படிப்பறியேன், புத்தம் புது ஓலை வரும், வந்ததே ஓ குங்குமம், தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே என்று பல பாடல்கள் பாடி புகழின் உச்சிக்கு சென்றார்.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நந்தனா என்று பெயர் வைத்தனர்.
துபாயில் 2011–ம் ஆண்டு நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தாள். இது சித்ரா வாழ்க்கையில் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு மகள் நினைவாக சமூக சேவை பணிகள் செய்து வந்தார். இப்போது கேரள மாநிலம் பருமுலாவில் உள்ள சர்வதேச புற்றுநோய் மைய ஆஸ்பத்திரியில் கீமோ சிகிச்சை பிரிவையும் மகள் நினைவாக கட்டி கொடுத்து உள்ளார்.
இதன் தொடக்க விழாவில் சித்ரா கலந்து கொண்டு தனது மகள் பற்றி பேசும்போது கண் கலங்கினார். மேற்கொண்டு பேசமுடியாமல் விம்மி அழுது பக்தி பாடலை பாடி பேச்சை முடித்துக்கொண்டார்.