யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலம் வாள்வெட்டுக்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதன் போது மேற்குறித்த பொலிஸ் குழு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை நேற்று (17) திங்கட்கிழமை இரவு தொடக்கம் இன்று (18) அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒன்பது பேரை கைது செய்ததுடன் அவர்கள் வசம் இருந்ததாக கூறி வாள்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள். அவர்கள் அரியாலை, மானிப்பாய், மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதானவர்களிடம் 3 அடி வாள்கள் ஆறு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற கொள்ளை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சந்தேகநபர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.