மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளராக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அவர் கடந்த நவம்பர் மாதம் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ சட்டப்படி வகிக்க முடியாது என்று வாதிடப்படுகிறது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது; “மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினரா என்பதில் பிரச்சினையிருக்கிறது. அவரை ‘கெளரவ’ எனக் குறிப்பிடுவதா அல்லது ‘திரு’ எனக் குறிப்பிடுவதா என்ற கேள்வி எழுகிறது” என்றார்.

“அரசியலமைப்பின் 99 (13) ஆவது உறுப்புரை இங்கு கவனிக்கத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி நீக்கப்பட்டால் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்துக்கு செல்லாம். ஆனால், ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சியில் அங்கத்துவம் பெற்றவுடனேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை உடனடியாகவே இழந்துவிடுகிறார்” என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஒரு சட்டத்தரணி என்பதோடு, சட்ட முதுமானி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்ட நிகழ்வு, அப்போது உள்ளுர் ஊடகங்களில் முக்கியத்துவம் மிக்க செய்தியாக வெளியாகி இருந்தன. மேலும், மஹிந்த ராஜபக்ஷவின் ‘ட்விட்டர்’ பக்கத்திலும், அவர் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டமை குறித்து, படத்துடன் பதிவொன்று இடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியுமா என்கிற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதை அடுத்து, அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அவருடைய அங்கத்துவம் குறித்து ஆராய்வதற்கு தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உட்பட 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை மனுவொன்றை கையளித்திருக்கின்றார்கள்.

Related posts