விஷால் மீதான குற்றச்சாட்டு ஆராய வேண்டும்

விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய அவர் இடம் கொடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பொன்.மாணிக்கவேல் மீது அதிகாரிகள் புகார்கள் எழுப்பியுள்ளனர். அதேசமயம், தனக்கு அரசியல் அழுத்தம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளாரே?

நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை ஆராய்ந்த பின்புதான் கருத்து சொல்ல வேண்டும். ஒருதரப்புக்கு மட்டும் பாரபட்சமாக கருத்து சொல்ல முடியாது. அரசியல் அழுத்தத்தை மீறிதான் இங்கு பணியாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தமிழகத்தில் அரசியல் அழுத்தம் நேர்மையாக இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தை மூடியுள்ளது குறித்து…

இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் இருக்கிறது. விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய வேண்டும் என்றால், அதற்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை அவருக்கு இருக்கும் என நம்புகிறேன்.

சீதக்காதி திரைப்படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதே…

அதற்கு ஆரம்ப விழா செய்தது என் படங்கள் என்று நான் வருத்தப்பட்டுக் கொள்ளலாம். படத்தைப் பார்த்துவிட்டு கருத்து தவறாக இருந்தால் சொல்லலாம். எல்லாமே தவறு என்றால் ஒன்றும் பேச முடியாது. கருத்து சுதந்திரம் நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.

———–

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைக்கு தமிழக அரசு காரணமா என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நீயா நானா போட்டி வலுத்து வருகிறது. விஷாலுக்கு எதிராக ஒரு அணியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர். இது இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனிடையே இன்று பூட்டை உடைக்க விஷால் தரப்பினர் வந்தார்கள். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினரை போலீசார் கைது செய்தார்கள்.

இந்த நிலையில், பாரதிராஜா தலைமையில் ஒரு குழுவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர்.

இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசு காரணமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில்:

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைக்கும் தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்குள் இருக்கிற பிரச்சினைதானே தவிர, அரசு இதில் தலையிடவே இல்லை.

மேலும் இந்தப் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறோம். இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Related posts