சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க ராணுவம் வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள் நாட்டுப் போரில் குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி சண்டையிட்டது.
இந்நிலையில், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது, ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என ட்ரம்ப் அறிவித்தார்.
ட்ரம்பின் இந்த முடிவுக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் அதிரடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது.
தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்டது. இருப்பினும், அங்கு ஐஎஸ் ஆதரவு அமைப்பினர் அவ்வப்போது நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பணியில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் தான் ஆப்கானிஸ்தானில் இருந்தும் வெளியேற அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் உடனடியாக இது நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை எனவும், 6 மாதங்களுக்கு பிறகே அமெரிக்கப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இதனை அமெரிக்கா தரப்பில் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.