பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்படி 135 ரூபாவிலிருந்து 125 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோல் 159 ரூபாவிலிருந்து 149 ரூபாவாகவும் (லீற்றர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது), ஓட்டோ டீசலின் விலை 106 ரூபாவிலிருந்து 101 ரூபாவாகவும், (லீற்றர் 5 ரூபாவால் குறைப்பு), சுப்பர் டீசலின் விலை 131 ரூபாவிலிருந்து 121 ரூபாவாகவும் (லீற்றர் 10 ரூபாவால் குறைப்பு) குறைக்கப்படுவதாக பிரதமர் நேற்று சபையில் அறிவித்தார்.
2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்கான பணத்தை ஒதுக்குவது தொடர்பான இடைக்கால கணக்கறிக்கையை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எரிபொருள் விலை குறைப்புக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். தொட ர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம். எனினும், ஒக்டோபர் 26 ஆம் திகதி உருவாக்கப்பட்ட அரசியல் பிரச்சினை காரணமாக அதனை சமர்ப்பிக்க முடியாது போனது.
இந்தப் பிரச்சினையால் ஒருவிடயம் மாத்திரம் தெளிவானது, அதாவது நாட்டின் நிதி நிர்வாகம் பாராளுமன்றத்தின் கீழேயே உள்ளது என்பது இதன்மூலம் தெளிவானது. அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அவசியம், அதேபோல அந்தப் பாராளுமன்றத்தினாலேயே நிதி நிர்வாகம் தீர்மானிக்கப்படும் என்பது சபாநாயகரின் நடவடிக்கை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு என்பவற்றால் இது உறுதியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் விலக வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும். அண்மைய அரசியல் குழப்பத்தாலேயே இன்று எமக்கு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சட்டத்துக்கு முரணான வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து, சட்டத்துக்கு முரணாக அரசாங்கம் அமைக்கப்பட்ட சூழலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே இடைக்கால கணக்கறிக்கையை நாம் முன்வைத்துள்ளோம். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் இன்று இடைக்கால கணக்கறிக்கையை கூட நிறைவேற்ற முடியாது போய், ஜனவரி மாதம் அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு நிதி இல்லாத நிலைமையே ஏற்பட்டிருக்கும்.
அபிவிருத்தி செயற்பாடுகள் பல இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கம்பெரலிய வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கம்பெரலிய வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு உள்விவகார அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்திருப்பதுடன், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன்.
ஜனவரி முதலாம் திகதி முதல் இதற்குத் தேவையான நிதியை ஒதுக்க முடியும். இந்த வேலைத்திட்டங்கள் எங்கு நிறுத்தப்பட்டன என்பது குறித்த விபரங்களைத் திரட்டி அவற்றை நிவர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இவ்வாறான நிலையிலேயே இன்று முதல் (21) அமுலுக்கு வரும்வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலையைக் குறைத்திருக்கிறோம் என்றார்.