யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட அமைச்சர்கள் நியமனத்தின் போதே அவருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அரசாங்க நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது.
இலங்கை நாடாளுமன்ற அமர்விலும் விஜயகலாவின் சர்ச்சை பேச்சு தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விஜயகலா மகேஸ்வரன் மீது ஐக்கிய தேசிய கட்சி ஒழுங்காற்று நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து விசாரணைகள் முடியும்வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராகவிருந்த விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியிருந்து கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி தாமாக விலகிக்கொண்டார்.
அத்துடன் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன் அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ரூபாய் 5 லட்சம் சரீரப் பிணையில் நீதிமன்றத்த்தால் விடுவிக்கப்பட்டார்.
விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையின் சுருக்கம் :
”நாங்கள் நிம்மதியாக வாழவும் நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும் எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.”
“அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்க்கிறார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.”
“நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போதுதான் உணர்கின்றோம்,” என்று கூறியிருந்தார்.
அமைச்சரவை விரிவாக்கம் : இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற , ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 27 பேர் நேற்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனர். வியாழக்கிழமை 29 பேரைக் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன.
இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், ராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அவரின் கூட்டுக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமே இதன்போது பதவிகள் வழங்கப்பட்டன.
மொத்தமாக 27 பேருக்கு வழங்கப்பட்ட இந்த அமைச்சுப் பதவிகளில் இருவர் தமிழர், நால்வர் முஸ்லிம்கள். இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஷ்வரனுக்கு கல்வி ராஜாங்க அமைச்சும், முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த பைசல் காசிம் என்பவருக்கு சுகாதார ராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.