அனைத்து மாகாண சபைகளுக்கும் விரைவாக ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின்போது அரசாங்கத்தின் பலத்தை பயன்படுத்தி வெற்றி பெறும் நோக்கில் ஒவ்வொரு மாகாண சபைக்காக அடுத்தடுத்து தேர்தல் நடத்தப்பட்டது.
இம்முறையை மாற்றியமைக்கும் நோக்கில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளோம்.
அதன்படி தேர்தலுக்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படுமென்றும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கடமைகளை நேற்று (21) பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது- “கடந்த 52 நாட்களாக நாட்டில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக நாடு பல வருடங்களுக்கு பின்நோக்கிச் சென்றுள்ளது.
அரசாங்க சேவை வீழ்ச்சி கண்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு யாருடைய உத்தரவின் பேரில் பணியாற்றுவது என தெரியாததொரு நிலை உருவானது.
இப்படியானதெரு சூழ்நிலை மீண்டும் உருவாகுவதை நாம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அலுவலகங்களில் பல வேலைத் திட்டங்கள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன.
இவற்றை மீள ஆரம்பித்து செயற்படுத்த வேண்டும்,” என்றும் அமைச்சர் கூறினார். “ஊடகங்களும் இவ்விடயம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
ஊடக நிறுவனங்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படாமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. நாம் விரைவில் ஒரே தினத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை முன்னெடுப்போம்.
ஒவ்வொரு மாகாண சபைக்கு ஒவ்வொரு தினத்தில் தேர்தல் நடத்தினால் அரசாங்க சொத்துக்கள் வீண்விரயமாக்கப்படுவதாக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதன் காரணமாக வாக்குறுதியளித்தபடி ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவோம். அதற்கான திகதி வரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.