டென்மார்க்கைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற சப்பாத்து டிசைனர் கெமிலா ஸ்கோவ்கோட் தனது 45 வது வயதில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 20ம் திகதி இவர் அமைதியாக மரமடைந்தார். இவர் அதிக காலம் புற்றுநோயின் பாதிப்பில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டென்மார்க்கில் மட்டுமல் ஹொலிவூட் திரையுலகிற்கும் இவருடைய சப்பாத்துக்கள் விற்கப்பட்டன. உலகத்தின் புகழ் பெற்ற பெரும் பணம் சுழலும் இடங்களில் எல்லாம் தனது கற்பனை வளத்தால் புகழை சேர்த்தவர். பிரபலங்களின் பாதங்களை தனது புகழ் மிக்க கற்பனையால் உயர்த்தியவர்.
இவருடைய வரைவில் உருவான சப்பாத்துக்கள் குறித்தும், சர்வதேச அளவில் இவருக்கு இருக்கும் பெருமை பற்றியும் இங்கிலாந்தின் பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
ஏலவே டென்மார்க் நாட்டிற்கு ஒரு பெருமை இருக்கிறது. மிகச்சிறந்த கற்பனை வளம் உருவாகவும், அந்தக் கற்பனையை உலகளாவிய உயர்ந்த தொழில் நுட்ப தயாரிப்பாக மாற்றவும் டென்மார்க்கின் மகிழ்ச்சியான வாழ்வு கலைஞர்களுக்கு உதவுகிறது என்பதே அந்தச் செய்தியாகும்.
இதனால்தான் டேனிஸ் கட்டிடக் கலைஞர்கள் உலகின் பிரமாண்டமான அதிசய நகரங்களின் கட்டிடங்களை எல்லாம் வரைந்து பணத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள்.
கட்டிடம் மட்டுமல்ல மின்சார விளக்குகள், ஆடைகள், தளவாடங்களில் இருந்து பல்வேறு உற்பத்திப் பொருட்கள் எல்லாம் டேனிஸ் டிசைன் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனையாகின்றன.
அந்த வகையில் பங் ஊல்ப்சன் என்ற டேனிஸ் டிசைன் தொலைக்காட்சி நிறுவனம் வரைந்துள்ள டிசைன் காரணமாக அதன் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. பெஸ்ற் செலா என்ற நிறுவனம் நவீன ஆடை வடிவமைப்பால் உலகில் 1700 கடைகளை திறந்துள்ளது.
இவற்றையெல்லாம் சிந்தித்தால் இவை போலவே சப்பாத்துக்களின் டிசைன்களும் அவற்றின் வருமானமும் என்று நாம் புரிய முடியும். எப்படி அடிடாஸ், நைக், பூமா என்ற சப்பாத்து நிறுவனங்கள் வியாபார சின்னத்தால் பெற்றுள்ள பெயரும் அவை அள்ளிக் கொட்டும் வருமானமும் இன்று உலகத்தை அதிசயிக்க வைக்கிறதோ.. அது போல ஓர் அதிசய கற்பனையாளரே இந்தப் பெண்மணி.
தனது அபார திறமையால் மிகவும் விலைகூடிய சப்பாத்து டிசைன்களை உருவாக்கி உலகத்தின் கவனத்தைத் தொட்ட கெமிலா ஸ்கோவ் கோட். இவரின் இழப்பு டென்மார்க்கிற்கு மட்டுமல்ல கிரியேட்டிவ் எனப்படும் கற்பனையால் காவியம் படைக்கும் கற்பனையாளர்களுக்கெல்லாம் கவலை தரும் செய்திதான்.
இவருடைய இறுதி யாத்திரை டிசம்பர் 31ம் திகதி இடம் பெறும்.
அலைகள் 23.12.2018 ஞாயிறு