டென்மார்க்கில் உள்ள ஓகூஸ் நகர விரைவு சாலையில் திடீரென கூட்டமாக வந்த 35 முதல் 45 வரையான கம்பளியாடுகள் வீதி விபத்தில் சிக்கின. கார்களில் மோதுண்டு பத்துவரையான ஆடுகள் மரணத்தையும் தேடிக் கொண்டன.
கடந்த வெள்ளி மாலை நடைபெற்ற சம்பவத்த்தில் பண்ணையாருக்கு தெரியாது தப்பி வந்த இந்த ஆடுகளின் உரிமையாளரை தேடி அலைகிறது போலீஸ்.
——————-
ஒருவரை மூன்று கார்கள் மோதிக் கொன்ற மாயம் என்ன..?
பொதுவாக வயல்புற வழிகளில் வீதியோரமாக நடந்து போவோர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதுவும் இரவு நேரமானால் இரட்டிப்பு ஆபத்து ஆளை அடையாளம் தெரியாமல் கார்கள் மோதிவிடும். சாட்சிகள் இல்லாவிட்டால் அடித்தவர்கள் ஓடிவிடுவதும் உண்டு.
அந்தவகையில் டென்மார்க் வைலை நகரத்தில் கிழக்கு புறத்தே உள்ள யுலஸ்மிங் வை என்ற இடத்தில் வீதியோரமாக நடந்து சென்ற 68 வயது நபர் காரினால் மோதி கொல்லப்பட்டுள்ளார். இவரை ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கார்கள் மோதியுள்ளன.
மறு பேச்சுக்கு இடமின்றி அந்த இடத்திலேயே மரணித்துவிட்டதாக போலீஸ் கூறுகிறது. இது இவ்விதமிருக்க கெல்சிங்குய நகரில் உள்ள கிலவை என்ற வீதியில் எரிந்த காரில் இறந்த நிலையில் ஓர் உடலம் கடந்த சனியன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நத்தார் விடுமுறை என்றால் டென்மார்க் வீதிகளில் வாகனங்கள் பெருக்கெடுத்து போக்குவரத்து ஸ்தம்பிதமடைவது வழமை. ஆனால் இந்த ஆண்டு போக்குவரத்துக்கள் சீராக நடந்துள்ளன. ரயில் போக்குவரத்துக்களும் அதுபோல சீராகவே நடந்துள்ளன.
————–
சிறுமியும் தாயும் எங்கே தேடுகிறது போலீஸ்
டென்மார்க் ஒல்போ நபரைச் சேர்ந்த 25 வயதுடைய ஆறு மாதக்கர்ப்பிணித்தாய் ஒருவரையும் அவருடைய ஒன்றரை வயது மகளையும் காணவில்லை என்று போலீஸ் தேடுகிறது.
இதில் முக்கியம் என்னவென்றால் ஒன்றரை வயதுடைய எல்யானா அல்லது எலியா என்ற சிறுமிக்கு பலவிதமான ஒவ்வாமை நோயுள்ளது. ஆகவே அறிந்தோர் உடன் தகவல் தந்து உதவும்படி போலீஸ் கேட்கிறது.
—————
மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபர் சிறையில்
டென்மார்க் தலைநகர் பகுதியில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 40 வயது நபர் ஒருவர் கைதாகியிருக்கிறார்.
கடந்த கோடை காலத்தில் இந்த பெண்கள் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். மேற்கொண்டு விசாரணைக்காக 17 தினங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அலைகள் 23.12.2018 ஞாயிறு