டென்மார்க்கின் சோசல் டெமக்கிரட்டி கட்சியின் தலைவி மெற்ற பிறடிக்சன் தான் பிள்ளைகளின் பிரதமர் என்று புதிய சுலோகம் ஒன்றை கிளப்பியுள்ளமை தெரிந்ததே.
பிள்ளைகளுக்கு பிரதமர் என்றால் பெரியவர்களுக்கு அவர் பிரதமர் இல்லையா? என்ற கேள்வி எழும் என்பதை அவர் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை.
இவ்வாறு பல சுலோகங்களில் பதவிக்கு குறி வைத்தவர்கள் டென்மார்க் அரசியலில் உண்டு, என்பதனால் பிள்ளைகளின் பிரதமர், முதியவரின் பிரதமர் என்பது பற்றி மக்கள் அதிக அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
ஆனால் மெற்ற பிறடிக்சன் கூறும்போது இன்று டென்மார்க்கில் நிறைய பிள்ளைகள் வறுமை நிலையில் உள்ளன. வென்ஸ்ர கட்சியின் ஆட்சி இந்த நிலைக்கு பிள்ளைகளை தள்ளியுள்ளது என்று மனம் கலங்கியுள்ளார்.
தான் பிரதமரானதும் முதல் வேலையாக பிள்ளைகளின் வறுமையை போக்க முதல் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் முழங்கியுள்ளார். இனியும் பிள்ளைகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதை தன்னால் பொறுக்க இயலாது என்றும் அம்மணி முழங்கியது காதில் கேட்கிறது.
ஆனால் கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாட்டவர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதில் புகழ் பெற்ற டேனிஸ் மக்கள் கட்சியின் நிழலுக்கு பின்னால் அம்மையார் ஒழிந்திருந்தது பலர் அறியாத இரகசியமாகும்.
அக்கட்சி உதவி பெற்று வாழும் வெளிநாட்டவருக்கு, சிறப்பாக மேலை நாட்டவர் அல்லாத தஞ்சம் கோரியோருக்கான கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானம் போட்டுள்ளது. இதற்கு மெற்ற பிறடிக்சன் ஆதரவு கொடுத்துள்ளார்.
இதனால் நடக்கப்போவது என்ன..? இப்போது டேனிஸ் பிள்ளைகளை விட பெரும் வறுமையை சந்திப்பது மேலை நாடுகளை சோராத வெளிநாட்டவர்களின் பிள்ளைகள்தான். இந்தப் பிள்ளைகள் மேலும் வறுமைக்குழிக்குள் விழ அம்மணியும் துணை போயிருக்கிறார்.
ஆனால் முன்னதாக ஒரு தடவை எந்த நாடு, நிறம் என்ற பேதம் பார்க்காமல் அனைத்து பிள்ளைகளுக்கும் உதவப்போவதாக கூறயிருந்தார். ஆனால் அவருடைய செயற்பாடு இரட்டை வேடங்கள் கொண்டதாக இருப்பதை டேனிஸ் ஊடகவியலாளர் சிலர் தெருவில் போட்டு உடைத்துள்ளனர்.
இன்று தொலைக்காட்சி சேவை 2 ல் இது குறித்த விவாதம் இடம் பெற்றது. அப்போது கருத்துரைத்த பேர்ளின்ஸ்க பத்திரிகை ஆசிரியர் இந்த அம்மணி டேனிஸ் பிள்ளைகளின் பிரதமரே அல்லாது வெளிநாட்டவர் பிள்ளைகளுக்கு அல்ல என்று கேலியாகக் கூறினார்.
ஆனால் இப்படியொரு சிக்கல் இருப்பது தெரியாமல் எடுத்து முழக்கியிருப்பார் மெற்ற பிறட்றிக்சன் என்று பொலிற்றிக்கன் ஆசிரியர் கூறினார். அவரைப் பொறுத்தவரை பின்னர் விவகாரத்தை ஆய்வு செய்து திருத்துவார் என்றும் சமரசம் கூறினார்.
ஆனால் உண்மையில் பிரச்சனை அதுவல்ல, பொய் கூறும் அல்லது இரட்டை வேடம் போடும் பாம்பு நாக்கு பேர்வழிகள் அதை அறணைபோல விரைவாக மறந்துவிடுவதால் வரும் சிக்கலே இதுவென்பதை அங்கு யாரும் விண்டுரைக்கவில்லை.
அலைகள் 23.12.2018 ஞாயிறு