இரட்சகராகிய இயேசு நமக்காக வெளிப்பட்டார்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உன்னதத்தின் ஆறுதல் நேயர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நத்தார் நல்வாழ்த்துக்கள்.
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்த கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். 1பேதுரு 1:20
நமது இரட்சகராகிய இயேசுவின் பிறப்பு தற்செயலாக நடைபெற்ற ஓர் சம்பவம் அல்ல. அவரது பிறப்பு பழையஏற்பாட்டில் முன்குறிக்கப்பட்ட அல்லது, முன் அறிவிக் கப்பட்ட ஒன்றாகும். தேவன் தமது தீர்க்கதரிகள்மூலம் பங்குபங்காகவும் வகைவகை யாகவும் வெளிப்படுத்தினார் என்று நாம் வேதத்தில் காண்கிறோம். எபி.1:1
இயேசுவின் பிறப்பைக் குறித்து வார்த்தையால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை நாம் பார்ப்போம். இயேசு கொடுக்கப்பட்டார் என்றும், உரியகாலத்தில் வந்தார் என்றும், பிதா அவரை அனுப்பினார் என்றும், பிரசன்னமானார் என்றும், வெளிப்பட்டார் என்றும், தோன்றினார் என்றும், உதித்தார் என்றும் வேதத்தில் விளங்கப்படுத்தப் பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இதன்மூலம் நாம் அறிய வேண்டியது அவர் முன்பு பரலோகத்தில் பிதாவோடு வாசமாய் இருந்துள்ளார் என்பதை. அவர் முன்பிருந்த தனது மேலான நிலையைவிட்டு கீழான மனிதனுடைய நிலைக்கு இறங்கி வந்தார் என்பதை அவரது பிறப்பு நமக்கு எடுத்துரைக்கிறது. அவரது பிறப்பைக் குறித்து விளக்கப்பட்ட ஒவ்வொருவார்த்தையும் ஆழ்ந்த அர்த்தத்தையும் சத்தியத் தையும் உடையதாக காணப்படுகிறது.
ஏரோது சாஸ்திரிகளின் வாயிலாக இயேசுவின் பிறப்பை கேள்விப்பட்டபோது வேதபாரகர் எல்லோரையும் அழைத்து கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள் வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்துபார்த்து யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்கள் என்று விளக் கினார்கள் (மத். 2:4-5). இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பழையஏற்பாட்டில் மறைபொருளாகவும் இரகசியமாகவும் நிழலோட்டமாகவும் எழுதப்பட்டுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர் இவ்வுலகத்தின் இராட்சியங்களை ஆழும் படியாகவோ, இவ்வுலகத்தின் கனத்தையும் மகிமையையும் சுதந்தரிக்கும் படியாகவோ அவர் மாமிசத்தில் வெளிப்படவில்லை. அப்படியென்றால் இயேசுகிறிஸ்து ஏன் இவ்வுலகில் வெளிப்பட்டார்? அவர் ஏன் வெளிப்பட வேண்டும்?
அவரை விசுவசிக்கிற நமக்காகவே அவர் வெளிப்பட்டார். இதனையே மேலே நாம் வாசித்த வசனம் (1பேதுரு 1:20) வெளிப்படுத்துகிறது. அவர் இவ்வுலகில் வெளிப் பட்டதினால் அவரை விசுவசிக்கிறவர்கள் பெற்ற, பெறப்போகும் ஆசீர்வாதங்களைக் குறித்து தியானிப்போம்.
1. இயேசு பிறந்ததினால் அன்பு வெளிப்பட்டது.
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதாலே தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது 1யோவான் 4: 9.
இயேசு பிறந்தபோது அவர்மூலமாக தேவன் தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசுவே இவ்வுலகிற்கு அன்பு இன்னதென்று கற்றுக்கொடுத்தார். உலகில் பாவமும் சாபமும், பகையும் விரோதமும், பெருகியிருந்த அந்நாட்களில் இயேசு அன்பின் உருவாய் வெளிப்பட்டார். பாவிகளை நேசித்தார். நேயுற்றவர்களை தொட்டுக் குணமாக்கினார். நமக்காக சிலுவையிலே ஒப்புக்கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசு தமது வாழ்வில் பல இன்னல்களை சந்தித்தார். அவைகள் மத்தியில் அவர் பழிவாங்காமலும் பதில்செய்யாமலும் யாவரிடத்திலும் அன்புகூர்ந்தார்.
சிலுவையில் அறைந்தபோது தம்மை ஏளனம்செய்தவர்களையும், தம்முடன் சிலுவையில் அறையப்பட்டவனையும் மன்னித்து அன்புகூர்ந்தார். அவருடைய உள்ளத்தில் இருந்து எப்போதும் தெய்வீக அன்பு ஓடிக்கொண்டிருந்தது.
2. இயேசு பிறந்ததினால் கிருபை வெளிப்பட்டது.
நம்முடைய இரட்சகராகிய இயேசுpறிஸ்து பிரசன்னமாதலினாலே அந்தகிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தை பரிகரித்து ஜீவனையும் அழியாமையையும் சுவிசேத்தினாலே வெளியரங்கமாக்கினார் 2தீமோத்தேயு110.
ஆதாமின் பாவத்தினால் ஆக்கினைக்குள்ளான மனுக்குலம் மரணத்தை சம்பாதித் ததுமல்லாமல் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலைகாண இயலாமல் தவித்தது. ஆனால் இயேசு பிறந்ததினால் தகுதியற்ற நமக்கு அவருடைய கிருபை வெளிப்பட்டது. அவருடைய பரிபுரணத்தினால் நாம் கிருபை பெற்றோம். இயேசு பிறக்கும்போது நம்மை மீட்கும்படியான கிருபையும் வெளிப்பட்டது. அவரது கிருபை ஒன்றே நம்மை பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் பாவபிரமாணத்திலிருந்தும் விடுதலையாக்கிற்று.
3. இயேசு பிறந்ததினால் நித்திய ஜீவன் வெளிப்பட்டது.
அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவிடத்திலிருந்து வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்து சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம் 1யோவான் 1: 2
ஆதி தகப்பன் ஆதாமின் கீழ்ப்படியாமையாலே மரணம் நம்மை ஆண்டு கொண்டது. மனிதன் பாவத்தினாலே நித்திய ஆக்கினையை அடைகிறான். இயேசு இவ்வுலகில் பிறந்ததினால் நமக்கு நித்திய ஜீவன் வெளிப்பட்டது. அவரை விசுவசிக்கும் யாவருக்கும் தேவன் நித்திய ஜீவனை வாக்குப்பண்ணியுள்ளார். இயேசு இதனை பின்வருமாறு கூறுகிறார். குமாரனைக்கண்டு (இயேசுவைக் கண்டு) அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடைவதும் நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும் என்னை அனுப்பினவருடைய சித்தமாக இருக்கிறது என்றார் யோவான் 6:10. நாம் பெற்றிருக்கிற இந்த வாக்குத்தத்தம் எவ்வளவு மேன்மையானதாக இருக்கிறது. இது யேசுபாலகனான இவ்வுலகில் பிறந்ததினால் நமக்கு வெளிப்பட்ட ஆசீர்வாதமாகும்.
4. இயேசு பிறந்ததினால் பாவமன்னிப்பாகிய மீட்பு வெளிப்பட்டது.
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்துதீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை 1யோவான் 3:5.
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது மாறாத சட்டமாக இருக்கிறது. காளை ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தினாலே பாவம் நிவர்த்தி செய்யப் படவில்லை. பலியினாலும் காணிக்கையினாலும் மீட்பின்கிரயத்தை செலுத்த முடிய வில்லை. மீட்பின் கிரயத்தைச் செலுத்தும்படியாகவும் கிருபாதார பலியாகவும் தன்னையே ஒப்புக்கொடுத்து இயேசு இவ்வுலகில் வந்தார். அவர் தேவனுடைய ருபமாயிருந்தும் தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தானே வெறுமையாக்கி அடிமையின் ருபமெடுத்து மனுசர் சாயலானார் பிலி2:6-7. அவர் பாவமறியாதவர், தமது பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். அதினாலேயே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. இயேசு பிறந்ததினால் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு வெளிப்பட்டது.
இயேசுவின் பிறப்பாகிய கிறிஸ்மஸ் எமக்கு, பிதாவாகிய தேவனோடு ஒப்பர வாகுதலையும், அவரது பிள்ளையாகக்கூடிய சிலாக்கியத்தையும், அப்பாபிதாவே என்று அழைக்கக்கூடிய புத்திர சுவிகாரத்தையும் நமக்கு கொடுக்கிறது. இதுவே கிறிஸ்மஸ் சந்தோசம்.
இந்த சந்தோசத்தை அடைந்து கொள்ள இந்த விடுமுறை நாட்களில் அவரைக் குறித்து அறிந்து கொண்டு, அவரின்மூலம் அவரைத் தேடுவோருக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களை பெற்று சுபீட்சமாக வாழும்படியாக அன்புடன் வாழ்த்துகிறேன்.
பிறக்கப்போகும் புதியஆண்டு அனைவருக்கும் ஆசீர்வாதமான ஆண்டாக அமைவதாக.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonipillai. Rehoboth Ministries – Praying for Denmark