போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து ரியூப் தமிழ் காரியாலயம் வந்த 120 பிள்ளைகள்

யாழ்ப்பாண நகரத்தை இதுவரை பார்த்திராத முல்லைத்தீவில் போர் நடந்த பகுதியில் உள்ள 120 பிள்ளைகள் இன்று இரண்டு பேருந்து வண்டிகளில் ரியூப்தமிழின் யாழ்ப்பாண காரியாலயம் வந்தார்கள்.

டென்மார்க் சுனபோ நகரத்தில் இருந்து தாயம் சென்று, இப்போது வன்னியில் நிற்கும் திரு. லோரன்ஸ் அவர்கள் இந்தப் பிள்ளைகளை அழைத்து சென்றிருந்தார்.

இப்பிள்ளைகள் முல்லைத்தீவின் பல பகுதிகளில் இருந்தும் ஒன்று திரட்டப்பட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார்கள். முள்ளியவளை, கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, கோப்பாபுலவு, திம்பிலி, இரணைப்பாலை, கயல்வேலி போன்ற இடங்களில் இருந்து திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்டார்கள்.

இந்தப்பிள்ளைகளை ஆதரிக்க உலகத் தமிழினம் தயாராக இருக்கிறது என்ற செய்தியையும் பிள்ளைகளுக்கு சொன்னார்கள் ரியூப்தமிழ் பணியாளர்கள்.

கன்னித்தமிழும்..
கன்றின் குரலும்..
சொல்லும் வார்த்தை
அம்மா அம்மா..
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா..!
என்ற குரல் கேட்கிறது..

தாயை இழந்து, தந்தையை இன்றுவரை எங்கேயென்று தெரியாது அலப்பாரித்து, உலகத்தை பார்க்க முடியாத கைவிளக்கு இருளில் கழியும் நாட்களை மாற்றி இந்த குழந்தைகளின் உள்ளத்தில் புத்தொளி ஏற்ற எடுக்கப்பட்ட முயற்சி பெரிதும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

போரின் நெருப்பில் விளைந்த குருத்துக்களின் வாழ்க்கை போராட்டம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு ரியூப்தமிழின் நத்தார் தாத்தா பரிசுகளை வழங்கினார், நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

வானொலி எப்படி நடைபெறுகிறது என்ற வகுப்பும் பத்து பத்துப் பேராக அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது. சிறப்பாக மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வந்த பிள்ளைகள் அனைவருக்கும் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் நத்தார் பரிசாக வழங்கப்பட்டது.

காலம் போய்விடவில்லை..
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு றொனால்டோவாகவும், மரடோனா ஆகவும் லியோனல் மெஸி போலவும் உலகப்புகழ் பெற வேண்டுமென வாழ்த்தி இந்த நூல்கள் வழங்கப்பட்டன. டென்மார்க் வாழ் பிலுண்ட், கேர்னிங் நகர தமிழ் மக்கள் இந்த பெருமைக்குரியவர்கள்.

தாயகத்தின் பல பாகங்களில் பிள்ளைகள் இருளான பக்கங்களில் அடைபட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களை ஆதரித்து அனுசரித்து இவ்வாறான உதவிகளை வழங்கியமை பெரிய விடயம் என்று லோரன்ஸ் அவர்கள் பாராட்டினார்.

வானொலி என்பது பாட்டு போட்டுவிட்டு விளக்கம் கொடுப்பதல்ல, அதை வைத்து இந்த சமுதாயத்திற்கு என்ன செய்கிறோம் என்பதுதில்தான் அதன் வெற்றியே தங்கியிருக்கிறது. அந்த வகையில் ரியூப்தமிழ் எப்.எம்மின் வெற்றிக்கொடி வானில் பட்டொளி வீசிப்பநக்கிறது.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே..
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே..
நாளை உலகை ஆள வேண்டும்
எங்கள் போரில் பூத்த பொன்மலர்கள்.. என்பதே எம் ஆசை..!!

இந்த பிள்ளைகளை ஆதரிக்கும் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள். தாயகத்தில் உள்ள பிள்ளைகளை எல்லாம் அன்புடன் மதித்து ரியூப்தமிழ் புத்தகச் சந்தை இலவசமாக ஆயிரக்கணக்கான நூல்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வழங்க ஆரம்பித்துள்ளது.

இப்போது உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் அவர்கள் கைகளில் மின்னுகிறது. நாளை நம்பிக்கை மிக்க புதிய தலைமுறையை உருவாக்க எடுக்கப்பட்ட இந்த அறிவியல் முயற்சி வெற்றி பெறும் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

முதலில் மாணவர்களை சர்வதேச அறிவியல் மயப்படுத்த எடுக்கப்பட்ட ரியூப் தமிழ் புத்தக சந்தையை ஆதரிப்பதும் நமது கடமையே.

இதில் சம்மந்தப்பட்ட டென்மார்க், இலங்கை உறவுகள் அனைவருக்கும் இந்தப் புகழ் சென்றடையும். சிறப்பாக பிலுண்ட், கிறீன்ஸ்ரட், கேர்னிங் நகர தமிழ் உறவுகளும் பாராட்டு பெறுகிறார்கள்.

தங்கங்களே நானை தலைவர்களே..
சென்று வாருங்கள்.. வென்று வாருங்கள்..

அலைகள் 28.12.2018 வெள்ளி

Related posts