நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடுத்த வருடத்துக்குள் முற்றாக ஒழிப்பதற்கு ஆதரவு வழங்கும் அதேநேரம் இனவாதத்துக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புமாறும் சபாநாயகர் கரு ஜயசூரிய சமயத் தலைவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
சபாநாயகர் கடந்த புதன்கிழமை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சர்வ மதத் தலைவர்களை சந்தித்தபோதே இவ்வேண்டுகோளை முன்வைத்ததாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் கண்டி மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற இனக்கலவரத்தை தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் சர்வ மத மாநாடொன்று நடத்தப்பட்டது.
அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக கண்டியிலும் அம்பாறையிலும் சபாநாயகர் விசேட கூட்டங்களையும் நடத்தியிருந்தார்.
சபாநாயகர் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சர்வ மத தலைவர்களை சந்தித்து உரையாற்றும்போதே, நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் நிலவும் மத வெறுப்புணர்வுகளையும் அதன் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதனையும் சுட்டிக்காட்டிய சபாநாயகர் அவற்றை களைவதற்கு சர்வ மத தலைவர்களின் தலைமைத்துவம் அவசியமென்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்புவதற்கு விகாரைகள் உள்ளிட்ட சமயத்தலங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டாமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு பெரும் சுமையென கூறிய சபாநாயகர், அதனை இல்லாமல் ஒழிப்பதற்கு சர்வ மதத் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரித்துடையவரா, இல்லையா என்பது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமென்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
மேலும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரதும் கட்சியை தீர்மானிக்கும் விடயத்தில் தான் தலையிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிப்பது தொடர்பில் இடம்பெற்றுவரும் விவாதத்தை அடிப்படையாகக் கொண்டே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
அவர் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் தான் நிலையியற் கட்டளையை பின்பற்றியிருந்ததாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
“பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் எப்போதும் நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்படும் முதிர்ச்சி பெற்றவர். எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரதும் கட்சியை தீர்மானிப்பது எனக்குரித்தான வேலையல்ல. அது நீதிமன்றத்தாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சர்வ மத பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே சபாநாயகர் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.