டென்மார்க்கில் பிள்ளைகள் பராமரிப்பு என்பது எப்போதுமே பிரச்சனைக்குரிய விடயமாகவே இருந்து வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த காலத்திற்குக் காலம் பற்பல யோசனைகள் வெளியாவதும் வழமை.
இதுபோல ஒரு யோசனை இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோரே தமது பிள்ளைகளை பராமரிக்க முடியும். இதற்காக அவர்களுக்கு நகரசபை சம்பளமும் வழங்கும்.
1868 குறோணர்களில் இருந்து 7481 குறோணர்கள் வரை இந்த சம்பளமானது வேறுபடுகிறது. இத்தகைய ஏற்பாட்டிற்கு டென்மார்க்கில் உள்ள 98 நகரசபைகளில் அரைப்பங்கு நகரசபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. வரும் முதலாம் திகதி மேலும் மூன்று நகரசபைகள் இணைகின்றன.
பிள்ளைகளை சுமார் 24 வாரங்கள் பராமரிக்க இந்த ஏற்பாடு வழி செய்வதாக செய்திகள் கூறுகின்றன. பிறந்த பிள்ளையை வோக்கஸ்ரூவ என்ற பராமரிப்பிற்கு ஒப்படைப்பதை தாமதித்தல், அல்லது பாடசாலை போக முன்னர் வரும் ஆறு மாதங்களில் பராமரித்தல் என்று பல பிரிவுகள் உள்ளன.
ஆனால் பெற்றோர் பராமரித்தால் அவர்கள் வேலைக்கு போவது, பிள்ளைகள் மற்றைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது, மொழியறிவு போன்றவற்றில் பின்னடைவு ஏற்படும் என்ற பழைய கருத்தொன்றும் உள்ளது.
மறுபுறம் பராமரிப்பு நிலையங்கள் செல்வும் பிள்ளைகள், உளவியலாளர் கூறுவது போல அபார திறமை பெறுவது உண்மையோ உண்மை என்பதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறதா என்பது ஒரு கேள்வி.
இருப்பினும் இன்றைய காலைச் செய்தியில் இந்த விவகாரம் முக்கிய இடம் பிடித்தது. செய்தி இப்படி இருந்தாலும் நகரசபைகள் இதற்குள் ஆயிரம் முடிச்சுக்களை வைத்திருப்பார்கள். விவகாரத்தை தட்டையாக பார்க்காமல் இப்படியொரு செய்தி தொலைக்காட்சிகளில் உலாப்போகிறது. உங்கள் நிலைப்பாடு என்னவென நகரசபைகளிடம் விசாரித்தால் உண்மைச் சூத்திரங்களை புரியமுடியுமன்றோ..?
டென்மார்க்கில் இப்பேதிருக்கும் கட்டமைவை உடைக்காமல் எந்தவொரு சலுகையும் வெளிவராது என்பது கவனிக்கத்தக்கது.
அலைகள் 30.12.2018