தாதா சாகேப் பால்கே உட்பட பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்ற பிரபல வங்காளம் மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்(95) கொல்கத்தாவில் நேற்று காலமானார்.
இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் மிருணாள் சென். வங்காளம் மொழி திரைப்பட இயக்குநரான இவர் இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர்.
இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் மற்றும் 4 ஆவணப்படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் பிற மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டும் வெளியாகின.
இளம்வயதில் திரைப்படங்கள் குறித்து பல புத்தகங்களைப் படித்ததால் மிருணாள் சென்னுக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தால் திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார். கொல்கத்தா ஸ்டுடியோவில் ஓடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.
இவர் முதன் முதலில் 1955இல் ‘ராத் போர்’ என்ற படத்தை இயக்கினார். அந்தப்படம் வெற்றி அடையவில்லை. இரண்டாவதாக ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வாணத்திற்கு கீழே) என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இப்படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. மூன்றாவதாக ‘பைஷே சிரவன்’ (இரவீந்திர நாத் தாகூர் இறந்த அன்று) என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இதன் பின் சென் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களாக குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை ஆகும்.
இவர் இயக்கி 1969இல் வெளிவந்த ‘புவன் ஷோம்’ (திரு. ஷோம்) என்ற திரைப்படம் இவரை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுகளை இவர் பலமுறை பெற்றுள்ளார்.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறவால் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் இருந்தவாறு சிகிச்சை பெற்றுவந்த மிருணாள் சென(95) நேற்று காலை 10.30 மணியளவில் காலமானார்.